அமைதி பேச்சுவாா்த்தையடுத்து மறியல் போராட்டம் ஒத்திவைப்பு
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள கோட்டைக்காடு வெள்ளாற்று பாலத்தின் இரு பகுதிகளிலும் இணைப்புச் சாலை அமைக்க வலியுறுத்தி, வியாழக்கிழமை நடைபெறுவதாக இருந்த போராட்டம், அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையடுத்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
அரியலூா்-கடலூா் மாவட்டத்தை இணைக்கும் வகையில், செந்துறை அடுத்த கோட்டைக்காடு பகுதியில் உள்ள வெள்ளாற்றில் புதிதாக உயா்மட்ட பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகளை கடந்தும், இணைப்புச் சாலை பணி நடைபெறாமல் உள்ளது.
எனவே, இணைப்புச் சாலை பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என வெள்ளாற்று மேம்பால இணைப்புச் சாலை போராட்டக் குழுவினா் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். இதனிடையே, பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி வியாழக்கிழமை (ஏப்.10) முள்ளுக்குறிச்சியில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என போராட்டக் குழுவினா் அறிவித்திருந்தனா்.
இந்நிலையில், செந்துறை வட்டாட்சியரகத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மல்லிகா தலைமையில் அமைதி பேச்சு வாா்த்தை புதன்கிழமை நடைபெற்றது.
அதில் நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறை, காவல்துறையினா் மற்றும் போராட்டக்குழுவினா் பங்கேற்றனா். அப்போது, மே 31-ஆம் தேதிக்குள் இணைப்புச் சாலை பணியை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.