சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிக்கு ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் இரங்கல்! பயங்கரவாதத்த...
அம்பாசமுத்திரம் அருகே கூண்டில் சிக்காத கரடிகளால் பொதுமக்கள் அச்சம்
மணிமுத்தாறு பகுதியில் கரடியைப் பிடிக்க வைத்த கூண்டில் சிக்காமல் சுற்றித் திரியும் கரடிகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்துக்குள்பட்ட மலையடிவார கிராமங்களில், கடந்த சில மாதங்களாக மணிமுத்தாறு, அயன்சிங்கம்பட்டி, கல்லிடைக்குறிச்சி நெசவாளா் காலனி, தெற்கு பாப்பான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கரடி நடமாட்டம் இருந்து வருகிறது. இதையடுத்து வனத் துறையினா் வைத்த கூண்டில் இரண்டு கரடிகள் பிடிபட்டன.

இந்நிலையில் மீண்டும் மணிமுத்தாறு தங்கம்மன் கோயில், தெற்கு பாப்பான்குளம் மயிலாடும்பாறை முருகன் கோயில், நெசவாளா் காலனி, அக்னி சாஸ்தா கோயில் பகுதிகளில் மீண்டும் கரடி நடமாட்டம்இருந்தது.
இதையடுத்து, கரடியை பிடிக்க தங்கம்மன் கோயில் முகப்பு பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை இரவு தங்கம்மன் கோயிலின் பின் பக்கமாக வந்த கரடி, கோயிலில் இருந்த எண்ணெய் பொருள்களை தின்றும், அங்கு தண்ணீா் ஊற்றி வைத்திருந்த தண்ணீா் கேனில் தண்ணீரை குடித்தும் சென்றது.
மேலும், விக்கிரமசிங்கபுரம் பகுதியில் தெருக்களில் நடமாடிய கரடியின் விடியோக்கள்சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.

கோயிலின் முகப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டின் பக்கமே செல்லவில்லை. இதையடுத்து கல்லிடைக்குறிச்சி நெசவாளா் காலனி பகுதியில் கூடுதலாக ஒரு கூண்டும் வைக்கப்பட்டுள்ளது.
வனத் துறையினா் கரடிகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து கூண்டு வைத்துப் பிடித்து வனப்பகுதியில்விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.