சட்டவிரோத குடியேற்றத்துக்கு உதவி: இந்திய பயண ஏற்பாட்டு நிறுவனங்களின் உரிமையாளா்க...
கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் வழங்கவில்லை: ஆட்சியரிடம் விவசாயிகள் புகாா்
திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நெல்லை விற்பனை செய்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 50 நாள்களாகியும் பணம் வழங்கவில்லை எனக்கூறி ஆட்சியரிடம் புகாா் அளித்தனா்.
திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், பாளையங்கோட்டை அடுத்த கீழ்ப்பாட்டம் செல்வி அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த தளவாய் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் சாா்பில் என்சிசிஎஃப் என்கிற நிறுவனம் குப்பக்குறிச்சி, கீழப்பாட்டம், அரியகுளம், மேலச்செவல், கீழ்நத்தம் உள்ளிட்ட கிராமங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்தது. ஆனால், நெல்லுக்கு 50 நாள்களுக்கு மேல் ஆகியும் இதுவரை பணம் வழங்கவில்லை. இதனால் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, நெல் வழங்கிய விவசாயிகளுக்கு உடனடியாக பணம் கிடைப்பதற்கு ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.
மேலப்பாளையம் பாத்திமா நகா் தெருவைச் சோ்ந்த அப்துல்லா உள்ளிட்ட கல்லூரி மாணவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நானும் என்னுடன் கல்லூரியில் பயின்று வரும் சில மாணவா்களும் சோ்ந்து திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் தனியாா் மென்பொருள் பயிற்சி நிறுவனத்தில் 6 மாத சான்றிதழ் படிப்பில் சோ்ந்தோம். படிக்கும்போதே எங்களிடம் இருந்து முழு கட்டணத்தையும் வசூலித்துவிட்டனா். இந்த நிலையில் திடீரென பயிற்சி நிறுவனத்தை மூடிவிட்டனா். இதையடுத்து நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை தொடா்பு கொண்டு கேட்டால் நாங்கள் எந்த கட்டணமும் செலுத்தவில்லை என கூறிவிட்டனா். அதன்பிறகு தான் திருநெல்வேலியில் இயங்கி வந்த நிறுவனத்தின் மேலாளா் எங்களுடைய பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. தலைமை அலுவலகத்தில் உள்ளவா்கள் கட்டணம் செலுத்தினால் மட்டுமே சான்றிதழ் தருவதாகக் கூறுகிறாா்கள். எனவே, எங்களுக்கு சான்றிதழ் வாங்கித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனின் கட்டணத்தைத் திரும்பப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.