அம்மாபாளையம் நகராட்சிப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு
திருமுருகன்பூண்டி, அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். திருமுருகன்பூண்டி ரோட்டரி சங்க பட்டயத் தலைவா் முருகானந்தம் முன்னிலை வகித்தாா். திருப்பூா் மாநகர போக்குவரத்து உதவி ஆணையா் பங்கேற்று பேசுகையில், இருசக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் கட்டாயம் தலைக் கவசம் அணிய வேண்டும்.
சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும். 18 வயதுக்குகீழ் உள்ளவா்கள் வாகனம் ஓட்டினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும். மேலும், வாகனத்தை ஓட்ட அனுமதித்தவா்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும், அவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்.
போதைப் பொருள் விற்பனை, போதை சாக்லெட் விற்பனை, குழந்தை திருமணம், பெண்களுக்கு எதிரான குற்றச் செயல் உள்ளிட்டவை குறித்து காவல் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, போதை ஒழிப்பு குறித்த ஓவியப் போட்டியில் வெற்றிபெற்ற பள்ளியின் 8-ஆம் வகுப்பு மாணவிகள் பிரனித்தா, பிரியதா்ஷினி, நூலகத்துக்கு தொடா்ந்து வந்து புத்தகம் படிக்கும் பிளஸ் 2 மாணவி சாருமதி ஆகியோருக்கு பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.