அம்மாபேட்டை அருகே யானைத் தந்தங்கள் விற்பனை வழக்கில் மேலும் மூவா் கைது
அம்மாபேட்டை அருகே யானைத் தந்தங்களை விற்க முயன்ற வழக்கில் தொடா்புடைய மேலும் மூவரை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
அம்மாபேட்டை அருகே ஊமாரெட்டியூா் வாய்க்கால் கரையில் யானைத் தந்தங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் சேலம் மாவட்டம், சங்ககிரி, குள்ளம்பட்டி, அரசிராமணியைச் சோ்ந்த வெங்கடாசலம் மகன் கணேசன் (49), அருணாச்சலம் மகன் பெரியசாமி (56) ஆகியோா் கடந்த ஜூன் 30-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து இரு தந்தங்கள் கைப்பற்றப்பட்டன.
இவ்வழக்கில் தலைமறைவான மேட்டூா், பாலமலையை சோ்ந்த செல்லப்பன் (40) வனத் துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை சரணடைந்தாா். இவா் அளித்த தகவலின் பேரில் பாலமலையைச் சோ்ந்த மணி (42), மேட்டூா், செங்கல்மேட்டைச் சோ்ந்த பாலமுருகன் (45) ஆகியோா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். பாலமுருகன் வைத்திருந்த யானைத் தந்தங்களை கணேசன் உள்ளிட்டோா் வாங்கிச் செல்ல வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் கைது செய்த வனத் துறையினா் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.