அயா்லாந்து ஒருநாள் தொடா்: ஹா்மன்பிரீத், ரேணுகாவுக்கு ஓய்வு
அயா்லாந்துடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோதவிருக்கும் இந்திய மகளிா் அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
அணியின் கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா், பௌலா் ரேணுகா சிங் ஆகியோருக்கு இந்தத் தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அணியின் கேப்டனாகியிருக்கிறாா்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரின்போது ஹா்மன்பிரீத் காயம் கண்டாா். அதேபோல், ரேணுகா சிங்கிற்கு முதுகுப் பகுதியில் ஏற்கெனவே ஏற்பட்டிருந்த காயத்தால் தற்போது அவதி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அயா்லாந்து தொடரில் இருந்து இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடா்களை கைப்பற்றிய உத்வேகத்துடன் அயா்லாந்துடனான தொடரில் இந்தியா விளையாடுகிறது. அந்த அணிகள் மோதும் 3 ஒருநாள் ஆட்டங்களும் ஜனவரி 10, 12, 15 ஆகிய தேதிகளில் ராஜ்கோட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அணி விவரம்: ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), தீப்தி சா்மா (துணை கேப்டன்), பிரதிகா ராவல், ஹா்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், உமா சேத்ரி (வி.கீ.), ரிச்சா கோஷ் (வி.கீ.), தேஜல் ஹசப்னிஸ், ராகவி பிஸ்த், மின்னு மணி, பிரியா மிஸ்ரா, தனுஜா கன்வா், டைட்டஸ் சாது, சாய்மா தாக்குா், சயாலி சத்காரே.