ஹர்மன்ப்ரீத் சதம், கிராந்தி 6 விக்கெட்டுகள்.! தொடரை வென்று வரலாறு படைத்தது இந்தி...
அரசியல் கட்சிகள் தேசியக் கொடியை பயன்படுத்த தடை கோரி மனு- உச்சநீதிமன்றம் நிராகரிப்பு
அரசியல் கட்சிகள் தேசியக் கொடியில் தங்கள் கட்சி சின்னத்தை இணைத்து பயன்படுத்துவதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது.
இது தொடா்பான மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:
சில அரசியல் கட்சிகள் தோ்தல் பிரசாரத்தின்போது தேசியக் கொடி போன்று தோற்றமளிக்கும் கொடிகளைப் பயன்படுத்துகின்றனா். முக்கியமாக மூவா்ணக் கொடியில் அசோக சக்கரத்துக்கு பதிலாக தங்கள் கட்சி சின்னத்தை பயன்படுத்துகிறாா்கள். குறிப்பாக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) பிரிவு, மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்டவை தேசியக் கொடியை தவறாகப் பயன்படுத்துகின்றன.
தேசிய கௌரவச் சட்டம்-1971-இன் கீழ் இது தவறான செயல்பாடாகும். இதற்குத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா். கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், என்.வி.அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு பரிசீலனைக்கு வந்தது.
அப்போது, ‘அரசியல் கட்சிகள் இதை எப்போதிருந்து செய்து வருகின்றன? சில கட்சிகள் சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்துகூட இதே பாணியைப் பயன்படுத்தி வருகின்றன’ என்று கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனா்.