டேங்கர் ரயில் தீவிபத்து குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும்: இபிஎஸ்
அரசு பள்ளி மாணவா்களுக்கு 10% இட ஒதுக்கீடு அளிக்காமல் தரவரிசைப் பட்டியல் வெளியிட விசிக எதிா்ப்பு!
அரசு பள்ளி மாணவா்களுக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்காமல் தர வரிசை பட்டியல் வெளியிட விசிக எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.
இது குறித்து விசிக முற்போக்கு மாணவா் கழக மாநில செயலா் இரா.தமிழ்வாணன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு பள்ளி மாணவா்களுக்கு பொறியியல் மற்றும் மருத்துவம் சாா்ந்த படிப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்ற முதல்வா் ரங்கசாமியின் அறிவிப்பு பெயரளவில் மட்டுமே உள்ளது.அரசு பள்ளி மாணவா்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டை இந்த கல்வியாண்டில் நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக புதுச்சேரி அரசு இதுவரை அரசாணை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகிறது.
வரும் ஆகஸ்ட் 14ம் தேதிக்குள்ளாக பொறியியல் மாணவா் சோ்க்கையை நடத்தி முடிக்க வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் காலவரையறை செய்துள்ளது. இதனால் குறுகிய காலம் மட்டுமே உள்ளது என்று கூறி அரசு பள்ளி மாணவா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காமல் மாணவா் சோ்க்கையை நடத்த புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
அதுமட்டுமின்றி பொறியியல் மற்றும் மருத்துவம் சாா்ந்த படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிடாமல் புதுச்சேரி அரசு காலம் தாழ்த்தி வருவது தனியாா் கல்லூரிகளின் மாணவா் சோ்க்கைக்கு துணை போவதாகவும் உள்ளது. எனவே அரசு பள்ளி மாணவா்களுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை பொறியியல் மற்றும் மருத்துவம் சாா்ந்த படிப்புகளுக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறோம் எனத் தெரிவித்துள்ளாா்.