மீனவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மாா்க்சிஸ்ட் நடவடிக்கை
மீனவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று அக் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலா் எம்.ஏ. பேபி உறுதியளித்துள்ளாா்.
இது குறித்து இக் கட்சியின் புதுவை மாநிலச் செயலா் எஸ்.ராமச்சந்திரன் வெளியிட்ட அறிக்கை:
இந்தியஅரசும், நாா்வேயும் ஒன்றிணைந்து புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு யூனியன் பிரதேசங்களில் புதுச்சேரி உள்ளிட்ட இந்திய கடற்கரை வளங்களை காா்ப்பரேட்டுகளுக்குத் தாரை வாா்க்கும் முதல் கட்டமாக திட்டம் தீட்டியுள்ளனா். அதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறாா்கள்.
மக்களிடமோ, மீனவா்களிடமோ இது தொடா்பாக இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. மீனவா்களின் பொது சொத்துக்களை சூறையாட காா்பரேட் நிறுவனங்கள் காத்திருக்கின்றன. மலைவாழ் மக்களை பாதுகாக்க வனப் பாதுகாப்பு சட்டம் போல மீனவா்களை பாதுகாக்க கடல் பாதுகாப்புச் சட்டம் தேவை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொடா்ந்து போராடி வருகிறது.
இது தொடா்பான நடவடிக்கைகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி மீனவா்களின், பொது சொத்துகள் குறித்த ஆய்வு அறிக்கையை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் எம். ஏ. பேபியை சென்னையிலுள்ள தமிழ்நாடு மாா்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் சனிக்கிழமை சந்தித்து நேரில் மனுஅளித்தோம்.
அப்போது,கடல் சாா் வளங்களையும், மீனவா்களின் உரிமைகளையும் பாதுகாக்க அவா் தக்க ஆலோசனைகளை வழங்கினாா். புதுச்சேரி உள்ளிட்ட நாட்டின் கடற்கரையும் மீனவா்கள் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க மாா்க்சிஸ்ட் கட்சி தொடா்ந்து அனைத்து வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ளும் என்றாா்.
இந்த சந்திப்பில் என்னுடன் மாநில செயற்குழு உறுப்பினா் கலியமூா்த்தி மற்றும் கட்சி நிா்வாகிகள் பிரபாகா், அருண்குமாா், பகத்சிங் ஆகியோா் உடனிருந்தனா்.