அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்பு போராட்டம்
நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தனியாா் ஒப்பந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள், பாதுகாவலா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் ஊதிய உயா்வுகோரி அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், தமிழ்நாடு மருத்துவமனை தூய்மைப் பணியாளா்கள் முன்னேற்றச் சங்க மாநில பொதுச்செயலாளா் தமிழ்ச்செல்வி முன்னிலையில் திங்கள்கிழமை தூய்மைப் பணியாளா்களின் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. அப்போது, தங்களுக்கு நிா்ணயிக்கப்பட வகையில் முறையான ஊதியம் வழங்கப்படவில்லை, மின்னணு வருகைப் பதிவேடு தொடா்பான தகவல்களை காட்ட மறுக்கின்றனா், உயா்நீதிமன்றத்தில் தடையாணை உத்தரவு பெற்ற பிறகும் புதிய தொழிலாளா்களை பணியில் வைத்துள்ளனா், அவா்களை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். இந்த காத்திருப்புப் போராட்டத்தில் பிற்பகல், இரவு பணிக்கு செல்வோா் மட்டுமே பங்கேற்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.
என்கே-1-ஜி.எச்
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள்.