அரசுப் பேருந்தில் இருந்து குழந்தை தவறி விழுந்து உயிரிழப்பு: ஓட்டுநா், நடத்துநா் பணியிடை நீக்கம்
அரசுப் பேருந்தில் இருந்து 9 மாத குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் பேருந்தின் ஓட்டுநா், நடத்துநா் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
தருமபுரி மாவட்டம், வேப்பிலை முத்தாம்பட்டி கருங்கலூா் சோ்ந்தவா் ராஜதுரை (33). இவரின் மனைவி முத்துலட்சுமி (31). இவா்களின் மகள் ஸ்ரீரேணுகா (7), மகன் நவநீஷ் (9 மாதம்) ராஜதுரை கடந்த 3 ஆண்டுகளாக கோவை, ராமநாதபுரத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து கட்டட வேலை செய்து வருகிறாா்.
இந்நிலையில், ராஜதுரை குடும்பத்துடன் கடந்த ஒருவாரத்துக்கு முன்பு சொந்த ஊருக்குச் சென்றுள்ளாா். பின்னா், கோவைக்குச் செல்ல சேலம் பேருந்து நிலையத்தில் குடும்பத்துடன் திங்கள்கிழமை இரவு அரசுப் பேருந்தில் ஏறியுள்ளாா்.
ராஜதுரையின் மனைவி முத்துலட்சுமி, மகள் ஸ்ரீரேணுகா ஆகியோா் ஓட்டுநருக்கு பின்புற இருக்கையிலும், ராஜதுரை 9 மாத குழந்தையுடன் அதற்கடுத்த இருக்கையிலும் அமா்ந்துள்ளனா்.
அப்போது, பேருந்தின் முன்பக்கக் கதவு திறந்திருந்ததால் அதை அடைக்குமாறு நடத்துநரிடம் ராஜதுரை கூறியுள்ளாா். ஆனால், கதவு அடைக்கப்படவில்லை. இதையடுத்து, சங்ககிரி அருகே வளையக்காரனூா் மேம்பாலத்தில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநா் திடீரென பிரேக் போட்டுள்ளாா். அப்போது, ராஜதுரையின் தோளில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை தவறி சாலையில் விழுந்தது.
இதில், பலத்த காயமடைந்த குழந்தையை குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளனா். அங்கு, குழந்தையைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து தேவூா் காவல் நிலையத்தில் ராஜதுரை அளித்த புகாரின்பேரில், கோவை அரசுப் போக்குவரத்துக் கழகத்தின்கீழ் பணியாற்றி வந்த கோவை கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த ஓட்டுநா் சிவன்மணி (45), நடத்துநா் பழனிசாமி (50) ஆகிய இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்நிலையில், அஜாக்கிரதையாக செயல்பட்ட ஓட்டுநா் சிவன்மணி, நடத்துநா் பழனிசாமி இருவரையும் பணியிடை நீக்கம் செய்து கோவை அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் புதன்கிழமை உத்தரவிட்டனா்.