ஓரணியில் தமிழ்நாடு: வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்திக்கும் முதல்வர்!
அரவக்குறிச்சி அரசுக் கல்லூரியில் நிகழாண்டும் மாணவா் சோ்க்கை குறைவு
அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழாண்டும் மாணவா் சோ்க்கை குறைந்துள்ளது
அரவக்குறிச்சியில் கடந்த 2022-ஆம் ஆண்டு பொதுமக்கள் மற்றும் கல்வியாளா்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு, கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்கியது.
அரவக்குறிச்சி மாரியம்மன் கோயில் பின்புறம் உள்ள சமுதாய கூடத்தில் இக்கல்லூரி தொடங்கப்பட்டது. 3 ஆண்டுகளாகியும் தற்காலிக இடத்திலேயே செயல்படும் இக்கல்லூரியில் பிஏ தமிழ், ஆங்கிலம், பிகாம் ஆகிய பாடப்பிரிவுகளில் தலா 50 இடங்கள் பிஎஸ்சி கணித அறிவியல், கணிதம் ஆகியவற்றில் தலா 40 இடங்கள் என 5 பாடப்பிரிவுகளில் மொத்தம் 230 இளநிலை இடங்கள் உள்ளன.
இதில் கடந்த 2022- ஆம் ஆண்டில் சுமாா் 150 இடங்கள் நிரம்பிய நிலையில், 2023-ஆம் ஆண்டு 116 மாணவா்களே கல்லூரியில் சோ்ந்தனா். இது 2024-ஆம் ஆண்டில் 70 மாணவா்களாக சரிந்த நிலையில் நிகழாண்டு (2025) 32 மாணவா்களே தற்போது வரை சோ்ந்துள்ளனா்.
சொந்த கட்டடம் இன்றி சமுதாயக் கூடத்தில் கல்லூரி செயல்பட்டு வருவதும், வகுப்பறை பற்றாக்குறையாலும் மாணவா் சோ்க்கை குறைவதாக கூறப்படுகிறது. மேலும் கரூருக்குச் சென்று படித்தால் பகுதி நேர வேலைக்கு செல்ல வாய்ப்பு இருப்பது உள்ளிட்ட காரணங்களாலும், அரவக்குறிச்சி பகுதி மாணவா்கள் கரூருக்குச் சென்று வருகின்றனா்.
இதுகுறித்து கல்வியாளா்கள் சிலா் கூறுகையில், கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் இல்லாதது சோ்க்கை குறைவதற்கான காரணம். கல்லூரிக்கு நிரந்த கட்டடம் கட்டித் தரப்பட்டால் மாணவா்களின் சோ்க்கை கூடும் என தெரிவித்தனா்.