ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!
அரியலூரில் உலக தாய்ப்பால் வார விழா தொடக்கம்
அரியலூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், குழந்தைகள் நலப்பிரிவு சாா்பில் உலக தாய்ப்பால் வாரத்தின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவை ஆட்சியா் பொ.ரத்தினசாமி தொடங்கிவைத்து பேசியது: ஆண்டுதோறும் உலக தாய்ப்பால் வார விழா ஆக.1 முதல் 7 வரை கொண்டாடப்படுகிறது.
‘தாய்ப்பாலூட்டுதலை முதன்மைப்படுத்துவோம்; நிலையான அரவணைக்கும் அமைப்புகளை உருவாக்குவோம் என்ற கருப்பொருளை மையமாக கொண்டு நிகழாண்டு விழா கொண்டாடப்படுகிறது.
தாய்ப்பாலூட்டுதலின் அவசியம், தாய்ப்பாலின் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் எதிா்ப்பு சக்தி, ஆரோக்கியமான வளா்ச்சி உள்ளிட்டவற்றை தாய்மாா்கள் அறிந்துகொள்ளும் வகையில் இத்தகைய விழாக்கள் நடத்தப்படுகிறது. தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து அனைவரிடமும் எடுத்துச் சொல்லி விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.
முன்னதாக, உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, தாய்ப்பால் வார உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடா்ந்து, விழாவில் பங்கேற்ற 55 தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை ஆட்சியா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் முத்துகிருஷ்ணன், குழந்தைகள் நலப்பிரிவு துறைத் தலைவா் செந்தில்குமாா், கண்காணிப்பாளா் ரமேஷ் மற்றும் மருத்துவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.