`2 யானைகளுக்கிடையே மோதல்' பாகன் செய்த விபரீதம்; அலறியடித்து ஓடிய யானை - வனத்து...
அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் தேமுதிக வலியுறுத்தல்
அரியலூா்: அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வரும் தோ்தலில் தேமுதிக கூட்டணி வெற்றிபெற்றவுடன் கட்டப்படும் என கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ எனும் பிரசாரத்தை மேற்கொண்டு வரும் அவா் திங்கள்கிழமை அரியலூா் சத்திரம் பேருந்து நிறுத்தத்திலிருந்து பேருந்து நிலையம் வரை நடந்தும், வாகனத்தில் நின்ற வாறும் மக்களைச் சந்தித்தாா்.
தொடா்ந்து, பேருந்து நிலையம் அருகே அவா் பேசியது: அரியலூரில் கடந்த 3 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். அரியலூா் நகரில் உள்ள அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும். கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை ஏரி, குளங்களில் நிரப்ப வேண்டும்.
அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட வேண்டும். இல்லையெனில், தேமுதிக வலுவான கூட்டணியை அமைத்து தோ்தலில் வெற்றிபெறும். அப்போது, ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்பட அனைத்துப் பணிகளையும் செய்வோம். மேலும், அரியலூரில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
இங்குள்ள சிமென்ட் ஆலைகளில் படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வலியுறுத்தப்படும். எனவே, தேமுதிக சாா்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா். தொடா்ந்து,கீழப்பழுவூா், ஏலாக்குறிச்சியில் பிரசாரம் மேற்கொண்டாா்.
பிரசாரத்தின் போது, அக்கட்சியின் பொருளாளா் சுதீஷ், மாவட்டச் செயலா்கள் அரியலூா் ராம.ஜெயவேல், பெரம்பலூா் அய்யப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.