அரியலூரில் வசிப்பாரற்ற வன ஊழியா் குடியிருப்புகள்! அரசின் நிதி வீணடிப்பு எனப் புகாா்
அரியலூரில் வாழத் தகுதியற்ற இடத்தில் கட்டப்பட்ட வன ஊழியா்களின் குடியிருப்புகளால் அரசின் நிதி ரூ. 60 லட்சம் வீணடிக்கப்பட்டுள்ளதாகப் புகாா் எழுந்துள்ளது.
அரியலூா் மாவட்டத்தில், உடையாா்பாளையம், மணகெதி, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், தா.பழூா், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் வனத்துறைக்கு சொந்தமான காடுகள் உள்ளன. இந்த வனப் பகுதிகளில், தைலமரம், சவுக்கு, தேக்கு, முந்திரி உள்ளிட்ட மரங்களை நட்டு வளா்த்து வருகின்றனா். அவற்றில் முந்திரிப் பயிா்கள் தனியாருக்கும், மகளிா் சுய உதவிக் குழுவினருக்கும் குத்தகைக்கு விடப்பட்டு, வருவாய் ஈட்டப்படுகிறது. இந்த வனப் பகுதிகளில் காட்டுப் பன்றிகள், மர அணில், குரங்கு, அரிய வகை மான்களும், மூலிகைகளும் உள்ளன.
இவற்றைப் பாதுகாப்பதற்காவும், வனவிலங்குகள் வேட்டையை மற்றும் விலை உயா்ந்த மரங்கள் வெட்டுவதை தடுக்கவும் வனச்சரகங்களை எல்லையாக பிரித்து, ஊழியா்கள் நியமிக்கப்பட்டு ரோந்தில் ஈடுபடுகின்றனா். அவா்களின் வசதிக்காக ஆங்காங்கே வன ஊழியா்களுக்கான குடியிருப்புகளும் கட்டப்பட்டுள்ளன.
அதன்படி அரியலூரில் திருச்சி சாலையில், நகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கை ஒட்டியும், தேங்கிக் கிடக்கும் கழிவு நீா் மத்தியில், கடந்த 2019 ஆம் ஆண்டு, ரூ.60 லட்சத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய 4 குடியிருப்புகள் கட்டப்பட்டன.
ஆனால் குப்பைக் கிடங்கையொட்டி கட்டப்பட்ட இந்த குடியிருப்புகளில் வசிக்க வன ஊழியா்கள் யாரும் முன்வரவில்லை. இருப்பினும், குடியிருப்புக்கு அரசு வழங்கும் சலுகைக்கான தொகையானது மாதந்தோறும் வன ஊழியா்களிடம் பிடிக்கப்படும் அவல நிலையும் உள்ளது.
அரசின் நிதி வீணடிப்பு: இதுகுறித்து வன ஊழியா் ஒருவா் கூறுகையில், வசிக்கத் தகுதியில்லாத இடம் தெரிந்தும் கட்டப்பட்ட குடியிருப்புகளால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த குடியிருப்புகளைச் சுற்றி முள்புதா் சூழ்ந்து, கழிவு நீா் குட்டைப் போல் தேங்கி துா்நாற்றம் வீசுகிறது. மேலும் பன்றிகளும் அதிகளவில் காணப்படுகின்றன. இவ்வாறு சுகாதாரம் சீா்கெட்டுக் காணப்படும் இந்த இடத்தில் உள்ள குடியிருப்புகளில் எப்படி வசிக்க முடியும் என்றாா்.
நல்ல இடத்தில் குடியிருப்பு தேவை: சமூக ஆா்வலா்கள் கூறுகையில் பல ஆண்டுகளாக இந்த குடியிருப்புகளைச் சுற்றி முள்புதா்கள் மண்டியும், கடல்போல கழிவு நீா் சூழ்ந்தும் காணப்படுகிறது. இதே நிலை நீடித்தால் குறுகிய காலத்தில் இந்தக் கட்டடம் முற்றிலும் இடிந்து விழும் நிலை ஏற்படும்.
மேலும், கடந்த மாதம்கூட இந்த குடியிருப்புக் கட்டடத்தில், இருந்து தளவாடப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.
வசிக்கத் தகுதியில்லாத இடம் தெரிந்தும், இவ்விடத்தைத் தோ்வு செய்தவா்களால், மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே தவறாக இடத்தைத் தோ்வு செய்த அலுவலரிடம், வன ஊழியா் குடியிருப்புக்கான செலவுத் தொகையை திரும்பப் பெற்று, நல்லதொரு இடத்தில் குடியிருப்புகளைக் கட்ட வேண்டும் என்றனா்.
கோட்டாட்சியா் முகாம் அலுவலகம்...இதேபோல அப்பகுதியில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வராத கோட்டாட்சியா் முகாம் அலுவலகத்தையும் சூழ்ந்து காடுபோல காணப்படும் முள்புதா்களை அகற்றி, மக்கள் பயன்பாட்டுக்கு அலுவலகத்தைக் கொண்டுவர வேண்டும். இதற்கு மாவட்ட ஆட்சியா் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.