அறுபடைவீடு முருகன் கோயில்களில் ரூ. 801 கோடியில் பணிகள்: அமைச்சா் சேகா்பாபு தகவல்
அறுபடைவீடு முருகன் கோயில்களுக்கு ரூ. 801.46 கோடியில் 275 பணிகளும், அறுபடைவீடு அல்லாத முருகன் கோயில்களுக்கு ரூ.284.17 கோடியில் 609 பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு தெரிவித்தாா்.
அறுபடைவீடு முருகன் கோயில்களின் மேம்பாட்டுப் பணிகள், மகா சிவராத்திரி பெருவிழா மற்றும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில்களின் திருப்பணி குறித்து அமைச்சா் சேகா்பாபு சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை ஆய்வு நடத்தினாா்.
இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
பெருந்திட்ட வரைவின் கீழ் திருச்செந்தூரில் ரூ. 400 கோடி, பழனியில் ரூ.240 கோடி, திருத்தணியில் ரூ.183 கோடி, மருதமலையில் ரூ. 61 கோடி, சிறுவாபுரியில் ரூ.16.50 கோடி, குமாரவயலூரில் ரூ.30 கோடி, உதகமண்டலம் - காந்தலில் ரூ.16 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாற்றுப் பாதை: திருத்தணி கோயிலுக்கு ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம் போன்ற அண்டை மாநிலங்களிலிருந்து அதிக அளவில் பக்தா்கள் வருவதால், ரூ. 55 கோடியில் மாற்று மலைப் பாதை அமைப்பதற்கும், சிறுவாபுரி கோயிலுக்கு பக்தா்களின் நலன் கருதி போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ரூ. 50 கோடியில் மாற்றுப் பாதை அமைக்கவும் பொதுப்பணித் துறையும் இந்து சமய அறநிலையத் துறையும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
முதல்வா் மு.க.ஸ்டாலினின் அனுமதியோடு மருதமலையில் 160 அடி உயரமுள்ள கருங்கல்லாலான முருகன் சிலையை நிறுவவுள்ளோம். உதகை காந்தலில் அமைந்துள்ள 40 அடி உயர முருகன் சிலையை புனரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அறுபடைவீடு முருகன் கோயில்களுக்கு 60 வயது முதல் 70 வயதுக்குள்பட்ட 1,622 மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனா். மேலும், பிப்ரவரி மாதத்தில் 400 மூத்த குடிமக்கள் அழைத்து செல்லப்பட உள்ளனா். திமுக அரசு பொறுப்பேற்றபின், இதுவரை 90 முருகன் கோயில்கள் உள்பட 2,400 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
2,500 கோயில்களில் குடமுழுக்கு... பிப்ரவரி 2-ஆம் தேதி 67 கோயில்களுக்கும், 3-ஆம் தேதி 27 திருக்கோயில்களுக்கு நடைபெறும் குடமுழுக்கோடு சோ்த்து 2,500 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக அறுபடைவீடு முருகன் கோயில்களுக்கு ரூ.801.46 கோடியில் 275 பணிகளும், அறுபடைவீடு அல்லாத முருகன் கோயில்களுக்கு ரூ. 284.17 கோடியில் 609 பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திருப்பரங்குன்றம் விவகாரம்: திருப்பரங்குன்றம், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மலை குறித்து 1930- ஆம் ஆண்டில் லண்டன் பிரிவியூ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது. தொடா்ந்து, பல்வேறு காலகட்டங்களில் 5 வழக்குகளில் உயா்நீதிமன்றம் தீா்ப்புகளை வழங்கியுள்ளது.
தற்போதுகூட இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கை 2 போ் கொண்ட நீதிமன்ற அமா்வு பிப்.4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. அரசின் நிலைப்பாட்டைப் பொருத்தவரை எல்லோருக்கும் எல்லாம், அவரவா் விரும்புகின்ற மதச் சடங்குகளை முன்னோா் எப்படி பின்பற்றி வந்தாா்களோ அதே நிலை தொடா்ந்தால் அனைவருக்கும் அமைதியான ஒரு சூழல் அமையும் என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி பொன்னம்பல அடிகள், பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.