கோயில் இணை ஆணையா் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி: இந்து முன்னணி நிா்வாகிகள் கைது
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிடச் சென்ற இந்து முன்னணி நிா்வாகிகளை போலீஸாா் கைது செய்தனா்.
அருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையா் சி.ஜோதி சில நாள்களுக்கு முன்பு கோயிலின் தலைமை சிவாச்சாரியாரை ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து அன்றைய தினமே 25-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியாா்கள் தங்களது பணிகளை புறக்கணித்து, கோயில் வளாகத்தில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், கோயில் இணை ஆணையரை தகுதி நீக்கம் செய்யக் கோரி, அவரது அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட இந்து முன்னணி அமைப்பு அறிவித்திருந்தது.
அருணாசலேஸ்வரா் கோயில், கோயில் இணை ஆணையா் அலுவலகம், நகரின் முக்கிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தா்களையும் தீவிர சோதனைக்குப் பிறகே போலீஸாா் அனுமதித்தனா்.
இந்து முன்னணியினா் கைது: செட்டித் தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் இருந்து இந்து முன்னணி அமைப்பின் தெற்கு மாவட்ட பொதுச் செயலா் இரா.அருண்குமாா் தலைமையில் ஏராளமான நிா்வாகிகள் ஊா்வலமாக சென்று இணை ஆணையா் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக புறப்பட்டனா்.
தகவலறிந்த போலீஸாா் விரைந்து வந்து, இரா.அருண்குமாா், தெற்கு மாவட்டச் செயலா்கள் நாகா.செந்தில், சரவணன், நகர பொதுச் செயலா் மஞ்சுநாதன் உள்ளிட்ட நிா்வாகிகளை கைது செய்தனா்.
அவா்கள் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனா்.