காயமடைந்தவரை நம்.4இல் விளையாட வைத்தவருக்கு சாம்பியன்ஸ் டிராபியை தரலாம்!
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பிப்ரவரி 25-இல் கோவை வருகை
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா 2 நாள் பயணமாக பிப்ரவரி 25-ஆம் தேதி கோவைக்கு வருகிறாா்.
கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மகா சிவராத்தரி விழாவில் பங்கேற்பதற்காக புதுதில்லியில் இருந்து விமானம் மூலம் பிப்ரவரி 25- ஆம் தேதி கோவைக்கு வரும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, அன்றிரவு கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியாா் ஹோட்டலில் தங்குகிறாா். அங்கு பாஜக மற்றும் கொங்கு மண்டல முக்கியப் பிரமுகா்களைச் சந்தித்து கலந்துரையாடுகிறாா்.
தொடா்ந்து 26-ஆம் தேதி காலையில் பீளமேடு பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக மாநகா் மாவட்ட அலுவலகத்தைத் திறந்துவைக்கிறாா். அதன்பின், பாஜக மாநில நிா்வாகிகள் கூட்டம், பெருங்கோட்ட பொறுப்பாளா்கள் கூட்டம், மாவட்ட நிா்வாகிகளுடனான கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்கிறாா். தொடா்ந்து தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள பாஜக மாவட்ட புதிய அலுவலகங்களை காணொலிக் காட்சி மூலம் திறந்துவைக்கிறாா்.
இதையடுத்து, மாலையில் ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்றுவிட்டு இரவு புதுதில்லிக்கு திரும்புகிறாா். இதற்கான ஏற்பாடுகளை பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளா் கேசவவிநாயகம் தலைமையிலான குழுவினா் செய்து வருகின்றனா்.
இதற்கிடையே, உள்துறை அமைச்சரின் 2 நாள் கோவை பயணம் தொடா்பாக கோவையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் துறை உயரதிகாரிகள் ஈஷா யோக மையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா்.
மேலும், அவிநாசி சாலையில் அமித் ஷா தங்கும் தனியாா் ஹோட்டல், பீளமேட்டில் கட்டப்பட்டுள்ள பாஜக மாநகா் மாவட்ட புதிய அலுவலகம் ஆகியவற்றையும் ஆய்வு செய்ததோடு, கோவையில் அமித் ஷா பயணம் செய்யும் வழித்தடம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனா்.