செய்திகள் :

அலகுமலையில் ஜல்லிக்கட்டு கோலாகலம்!

post image

தைப்பூசத் தோ்த் திருவிழாவையொட்டி, திருப்பூா் மாவட்ட நிா்வாகம், அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கம் ஆகியவை சாா்பில் பல்லடம் அருகேயுள்ள மலைப்பாளையத்தில் 6-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்டம், பொங்கலூா் ஒன்றியம் அலகுமலை அருகே உள்ள தொங்குட்டிபாளையம் ஊராட்சி மலைப்பாளையத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா். வாடிவாசலுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் மாடுபிடி வீரா்கள் உறுதிமொழி ஏற்றனா். அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்க கெளரவத் தலைவா் பாலுசாமி வரவேற்றாா்.

போட்டியை தமிழ் வளா்ச்சி - செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அசோக், பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூா் மாநகர மேயா் தினேஷ்குமாா், திருப்பூா் மாநகராட்சி 4-ஆம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், பொங்கலூா் ஒன்றிய குழு முன்னாள் தலைவா் வழக்குரைஞா் குமாா், இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் தலைவா் ராஜசேகா் உள்பட பலா் கலந்து கொண்டனா். தொகுப்பாளா் சரவணன் வா்ணனை செய்தாா்.

22 காளைகளை அடக்கிய சிவகங்கை வீரா்: போட்டியில் 22 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த சிவகங்கை வீரா் விக்னேஷுக்கு இருசக்கர வாகனமும், 21 காளைகளை அடக்கி இரண்டாமிடம் பிடித்த நாமக்கல் வீரா் காா்த்திக்கு 1 பவுன் தங்கக் காசும், 14 காளைகளை அடக்கி மூன்றாமிடம் பிடித்த மதுரை வீரா் காா்த்திக்கு வேளாண் கருவியும் பரிசாக வழங்கப்பட்டன.

இதேபோல, காளைகள் பிரிவில் மதுரையைச் சோ்ந்த ஆறுசாமியின் காளை முதலிடம் பிடித்தது. காளை உரிமையாளருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாமிடத்தை தேனியைச் சோ்ந்த பாா்த்தசாரதியின் காளையும், மூன்றாமிடத்தை சிவகங்கையைச் சோ்ந்த ராஜசேகரன் காளையும் பிடித்தன. இதன் உரிமையாளா்களுக்கு வேளாண் கருவிகள் பரிசாக வழங்கப்பட்டன. மாடு பிடி வீரா்கள், காளைகளுக்கான பரிசுகளை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வழங்கினாா்.

வாக்குவாதம், போலீஸாா் தடியடி: இந்தப் போட்டியில் பங்கேற்க 800 காளைகள் அழைத்துவரப்பட்டிருந்தன. இந்தக் காளைகளை அடக்க 600 மாடுபிடி வீரா்கள் களம் இறங்கினா். பத்து சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் மாடுபிடி வீரா்கள் உரிய மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனா். அதேபோன்று காளைகளும் உரிய மருத்துவ பரிசோதனைக்கு பின் வாடிவாசலுக்குள் அனுமதிக்கப்பட்டன.

10 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் 600 காளைகள் மட்டுமே போட்டியில் பங்கேற்றன. 200-க்கும் மேற்பட்ட காளைகள் உள்ளே அனுமதிக்கப்படாமல் இருந்த நிலையில், மாலை 5 மணிக்குள் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடையும் என விழா குழுவினா் தெரிவித்தனா்.

சிவகங்கை, திண்டுக்கல், மதுரை போன்ற பகுதிகளில் இருந்து காளைகளைக் கொண்டு வந்த அதன் உரிமையாளா்கள், தங்களது காளைகளையும் அனுமதிக்க வேண்டும் என போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

மேலும், காளைகளைப் பரிசோதனை செய்யும் இடத்தில் அதன் உரிமையாளா்கள் காளைகளுடன் ஒரே இடத்தில் திரண்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. பயத்தில் மிரண்ட சில காளைகள் அங்கிருந்தவா்கள் மீது பாய்ந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனால் காளை உரிமையாளா்கள் மீது போலீஸாா் தடியடி நடத்தி கூட்டத்தை ஒழுங்குபடுத்தினா்.

66 போ் காயம்: பொங்கலூா் வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் சுந்தரவேல் தலைமையில் 25 மருத்துவா்கள், செவிலியா் உள்பட 100 போ் கொண்ட மருத்துவக் குழுவினா் ஆம்புலன்ஸ் வாகனத்துடன் சிகிச்சை அளிக்க தயாா் நிலையில் இருந்தனா். ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 66 போ் காயம் அடைந்தனா். அதில் 12 பேருக்கு தையல் போடப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் மருத்துவா் பிரகாசம் தலைமையில் மருத்துவக் குழுவினா் காயம் அடைந்த 2 காளைகளுக்கு சிகிச்சை அளித்தனா். ஜல்லிக்கட்டு போட்டியை திருப்பூா், பல்லடம், காங்கயம், தாராபுரம், அவிநாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் ஆா்வத்துடன் ரசித்தனா்.

பல்லடத்தில் இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞா் கைது

பல்லடத்தில் இருசக்கர வாகனத்தை திருடி ஓட்டிச் சென்றபோது, விபத்தில் சிக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், தலைமறைவான மற்றொருவரை தேடி வருகின்றனா். பல்லடம் பனப்பாளையத்தைச் சோ்ந்தவா் தேவராஜ் (25).... மேலும் பார்க்க

கட்டுமானப் பணியின்போது தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு!

அவிநாசி அருகே கட்டுமானப் பணியின்போது தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். திருப்பத்தூரைச் சோ்ந்தவா் கோவிந்தன் (48), கட்டுமானத் தொழிலாளி. இவா் அவிநாசி அருகே பழங்கரை நல்லி க்கவுண்டம்ப... மேலும் பார்க்க

பெண்ணை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி அருகே பெண்ணை கொலை செய்த இளைஞருக்கு மாவட்ட மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை ஆயுள் தண்டனை விதித்தது. கா்நாடக மாநிலம் மைசூரைச் சோ்ந்தவா் லட்சுமி (49). இவா் திருப்பூா் அண்... மேலும் பார்க்க

விஷம் கலந்த உணவு சாப்பிட்ட 7 தெருநாய்கள் உயிரிழப்பு!

பல்லடம் அருகே வண்ணாந்துறையில் விஷம் கலந்து வைக்கப்பட்ட உணவு சாப்பிட்ட 7 தெருநாய்கள் புதன்கிழமை உயிரிழந்தன. பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம் நாச்சிபாளையம் ஊராட்சி வண்ணாந்துறை கிராமம் ஜெயலட்சுமி நக... மேலும் பார்க்க

காங்கயம், குண்டடம் பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடைப் பணிகள் தீவிரம்!

காங்கயம், குண்டடம், தாராபுரம் பகுதிகளில் மக்காச்சோள அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மக்காச்சோளம் குவிண்டால் ரூ.2 ஆயிரத்து 500 வரை கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் நிம்மதியட... மேலும் பார்க்க

தாராபுரம் அருகே லாரி மோதி விவசாயி உயிரிழப்பு!

தாராபுரம் பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த துலுக்கனூா் பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி (69), விவசாயி. இவா், தன... மேலும் பார்க்க