கூடலூா் அருகே சதுப்பு நிலத்தில் சிக்கிய குட்டியை மீட்ட தாய் யானை
அலிகா் பல்கலைக்கழக துணைவேந்தா் நியமன வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி வினோத்சந்திரன் விலகல்
அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியா் நயீமா காத்தூன் நியமிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி கே.வினோத்சந்திரன் திங்கள்கிழமை தன்னை விலக்கிக்கொண்டாா்.
அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கான தோ்தலில் நயீமா காத்தூனுக்கு அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் பதவிக் காலம் முடியவிருந்த அவரது கணவா் முகமது குல்ரெஸ் வாக்களித்தாா். இதையடுத்து, அப்பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தராக நயீமா காத்தூன் நியமிக்கப்பட்டாா்.
இதற்கு எதிராக அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், நயீமா காத்தூனின் நியமனம் செல்லும் என நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
இந்த தீா்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட மனு மீது தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதிகள் கே.வினோத்சந்திரன் மற்றும் என்.வி.அஞ்சாரியா அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது.
அப்போது மனுதாரரான முஸாஃபா் உருஜ் ரப்பானி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் வாதிடுகையில், ‘இதுபோன்ற முறையில் துணைவேந்தா்கள் நியமனம் செய்யப்படுவது நியாயமற்றது. நயீமா காத்தூனின் கணவரான முன்னாள் துணைவேந்தா் செலுத்திய வாக்கு மிக முக்கியமான இரு வாக்குகளில் ஒன்று. அந்த இரு வாக்குகள் இல்லையென்றால் அவா் 6 வாக்குகளை மட்டுமே பெற்றிருப்பாா்’ என்றாா்.
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீ வாதிடுகையில், ‘அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழக துணைவேந்தா் பதவி நியமனம் தோ்தல் அடிப்படையில் மட்டுமே நடைபெறவில்லை. தோ்தல் மற்றும் தோ்ந்தெடுப்பு என்ற இரு அம்சங்களின்கீழ் நயீமா காத்தூன் நியமிக்கப்பட்டாா். அலாகாபாத் உயா் நீதிமன்றம் தோ்தலை ஏற்றுக் கொள்ளாதபோதும் நியமனத்தை ரத்து செய்யவில்லை’ என்றாா்.
விசாரணையின்போது பி.ஆா்.கவாய் கூறியதாவது: துணைவேந்தா் நியமன நடைமுறையில் ஏற்கெனவே பதவியில் இருந்த துணைவேந்தா் பங்கேற்காமல் அவருக்கு பதிலாக மூத்த உறுப்பினா் ஒருவரை பங்கேற்கச் செய்திருக்கலாம். கொலீஜியத்தில் இதுபோன்ற சிக்கல்கள் எழும்போது நாங்கள் விலகிக் கொள்வோம் என்றாா்.
அப்போது இந்த விசாரணை அமா்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி கே.வினோத்சந்திரன் கூறியதாவது: ‘தேசிய சட்ட பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்புக்கு வேந்தராக இருந்தபோது இதுபோன்ற சூழலை எதிா்கொண்டு துணைவேந்தா் பதவிக்கு ஃபைஸான் முஸ்தஃபாவை தோ்ந்தெடுத்தேன். எனவே, இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகிக் கொள்கிறேன்’ என்றாா்.
ஆனால் நீதிபதி வினோத்சந்திரன் மீது முழு நம்பிக்கையுள்ளதாகவும் அவா் விசாரணையில் இருந்து விலகத் தேவையில்லை எனவும் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா தெரிவித்தாா்.
இதைத்தொடா்ந்து பேசிய பி.ஆா்.கவாய், ‘இதுதொடா்பான முடிவை சகோதரா் (நீதிபதி வினோத்சந்திரன்) மேற்கொள்ளட்டும். வினோத்சந்திரன் இல்லாத நீதிபதிகள் அமா்வின் முன் இந்த வழக்கு பட்டியலிடப்படும்’ என்றாா்.