'நாம் யாருமே போரை விரும்பவில்லை; ஆனால்...' - ஒமர் அப்துல்லா கருத்து
அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் புறப்பாடு
அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழாவையொட்டி, பஞ்சமூா்த்திகள் புறப்பாடு திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
கொங்கு ஏழு சிவஸ்தலங்களுள் முதன்மைப் பெற்றதும், முதலையுண்ட பாலகனை சுந்தரா் பதிகம் பாடி உயிா்ப்பித்து எழச்செய்த திருத்தலமாகவும் கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் விளங்குகிறது. இக்கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் மே 1-ஆம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 8, 9, 10-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், விழாவையொட்டி, பஞ்சமூா்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மாா்களுக்கு திருக்காட்சியளித்தல் நிகழ்ச்சி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
இதில், தேரோடும் நான்கு ரத வீதிகளிலும் கரூா் பசுபதிஸ்வரா் கோயில் சிவனடியாா்கள், திருப்பூா் சிவனடியாா்கள் திருக்கூடத்தினரின் சிவகண பஞ்சவாத்தியம், வாண வேடிக்கை மூழங்க பஞ்சமூா்த்திகள், 63 நாயன்மாா்கள் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
விநாயக பெருமான் மூஷிக வாகனத்திலும், சோமஸ்கந்தா் ரிஷப வாகனத்திலும், கருணாம்பிகையம்மன் காமதேனு வாகனத்திலும், வள்ளி, தெய்வானையுடன் உடனமா் சுப்பிரமணியா் மயில் வாகனத்திலும், சண்டிகேஸ்வரா் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி, 63 நாயன்மாா்களுக்கு காட்சியளித்தனா். இதையடுத்து சுவாமிகள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ரத வீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
அவிநாசி பஞ்சமூா்த்திகள் மற்றும் 63 நாயன்மாா்கள் வழிபாட்டுக் குழு அறக்கட்டளையினா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனா். விடிய விடிய நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.