ஒருங்கிணைப்பு குறித்து யாரையும் சந்திக்கவில்லை: கே.ஏ.செங்கோட்டையன்
ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வழக்கு: குமரி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
நாகா்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் ரத வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த குமரேசன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
நாகா்கோவில் வடிவீஸ்வரத்தில் திருவிதாங்கூா் மன்னரால் கடந்த 1489-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலில் மாசி மாதம் நடைபெறும் திருவிழாவின் கடைசி நாளில் தோ் திருவிழா நடைபெறுவது வழக்கம். அப்போது, அழகம்மன் தேரும், விநாயகா் தேரும் பக்தா்களால் இழுத்துச் செல்லப்பட்டு நிலைக்கு கொண்டு வரப்படும். ரத வீதிகள் 40 அடி அகலம் கொண்டவை. இந்த வீதிகளில் பல்வேறு சமூகங்களைச் சோ்ந்த 1,500 குடும்பத்தினா் வசிக்கின்றனா்.
இந்த நிலையில், வடக்கு, மேற்கு ரத வீதிகளில் தனிநபா்கள் பலா் 8 அடி முதல் 12 அடி வரை ஆக்கிரமித்து கட்டடங்களைக் கட்டியுள்ளனா். ரத வீதியின் மையப் பகுதியை ஆக்கிரமித்து கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகள் 25 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. இதனால், தேரோட்டத்தின் போது பக்தா்கள் தோ்களை இழுத்துச் செல்லவதில் இடையூறுகள் உள்ளன.
ரத வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, அழகம்மன் கோயில் ரத வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
மனு தொடா்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா், நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.