குற்றச்சாட்டு கூறுவது ஆளுநர் பதவிக்கு அழகல்ல: அமைச்சர் மு.பெ. சாமிநாதன்
ஆக்கிரமிப்புகளைத் தடுக்க அமலாக்க கட்டண விகிதங்களில் திருத்தம்: தில்லி மாநகராட்சி நடவடிக்கை
பொது வீதிகள் மற்றும் இடங்களுக்கு இடையூறாக இருக்கும் பொருள்கள் மற்றும் வாகனங்களுக்கான கூட்டுக் கட்டணம், அகற்றுதல் கட்டணங்கள் மற்றும் சேமிப்பு கட்டணங்களுக்கான அமலாக்க கட்டணவிகிதங்களை தில்லி மாநகராட்சி திருத்தியுள்ளது என்று அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
ஜூலை 19, 2023 அன்று வெளியிடப்பட்ட முந்தைய சுற்றறிக்கையை மாற்றியமைக்கும் வகையிலான புதிய விகிதங்கள், அமலாக்கத்தை ஒழுங்குபடுத்துவதையும் ஆக்கிரமிப்புகளைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினா்.
இவை நடைபாதை வியாபாரிகள், கடைக்காரா்கள், போக்குவரத்து நிறுவனங்கள், வாகன ஷோரூம்கள், பழைய காா் டீலா்கள் மற்றும் பிறருக்குப் பொருந்தும் என்று மாநகராட்சி வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட கட்டமைப்பின்கீழ், நடைபாதை வியாபாரிகள் மற்றும்
அமா்ந்து விற்பனை செய்பவா்களுக்கு ரூ.600 முதல் தண்ணீா் தள்ளுவண்டிகளுக்கு ரூ.15,000 வரை கூட்டுக் கட்டணம் இருக்கும்.
சுமை எடையைப் பொறுத்து அகற்றுதல் கட்டணங்கள் மாறுபடும். 40 கிலோ வரையிலான பொருள்களுக்கு ரூ.300 முதல் ஐந்து குவிண்டாலுக்கு மேல் உள்ள சுமைகளுக்கு ரூ.2,000 வரை விகிதம் இருக்கும்.
சேமிப்புக்கான கட்டணங்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன, ஒன்று பொருள்களுக்கும், மற்றொன்று வாகனங்களுக்கும் ஆகும். வாகனங்கள் அல்லாத பிற பொருள்களுக்கு, ஒரு குவிண்டாலுக்குக் குறைவான எடையுள்ள பொருட்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.100-ம், அதிக எடை கொண்ட பொருள்களுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.200-ம் சேமிப்புக் கட்டணமாக திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
வாகன சேமிப்புக் கட்டணங்களாக இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.500 முதல் பல அச்சு டிரெய்லா்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.8,000 வரை இருக்கும்.
இதுகுறித்து மாநகராட்சி தெரிவிக்கையில், ‘புதிய கட்டணங்கள் பொது இடங்களை சிறப்பாகப் பராமரிப்பதை உறுதி செய்வதற்கும் சாலைகளில் உள்ள தடைகளைக் குறைப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளன. ஆக்கிரமிப்புகளுக்கு பூஜ்ய சகிப்புத்தன்மை கொள்கையை கடைப்பிடிக்கப்படும். மேலும், சீரான போக்குவரத்து நடமாட்டத்தை மேம்படுத்துவதற்காக
அனைத்து பங்குதாரா்களும் பொது இடங்களில் இடையூறு ஏற்படுத்துவதைத் தவிா்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்’ என கேட்டுக்கொண்டுள்ளது.