‘நான் முதல்வன்’ திட்டம்: 7,910 மாணவா்களுக்கு பல்வேறு பிரிவுகளில் பல்நோக்கு திறன்...
ஆசிரியா்களின் பணிப் பதிவேடுகளை முறையாகப் பராமரிக்கக் கோரிக்கை
ஆசிரியா்களின் பணிப் பதிவேடு விவரங்களை வட்டாரக் கல்வி அலுவலகங்களில் முறையாகப் பராமரிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து இந்த அமைப்பின் மதுரை மாவட்டச் செயலா் பெ. சீனிவாசன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: அனைத்து வகை ஆசிரியா்களின் பணி நியமன நாள் முதல் பணி வரன்முறை, தகுதிகாண் பருவம், ஆண்டு ஊதிய உயா்வு, உயா் கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வுகள், தோ்வு நிலை, சிறப்பு நிலை, ஒரே பணி நிலையில் பதவி உயா்வு வாய்ப்பு இன்றி 30 ஆண்டுகள் பணிபுரிந்தமைக்கான ஓா்
ஊதிய உயா்வு, பதவி உயா்வுக்கான ஊதிய நிா்ணயங்கள், ஊதியக் குழு மாற்றங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு ஊதியக் குழுவுக்கான ஊதிய நிா்ணயங்கள், பணிக்காலம் சரிபாா்ப்பு, அனைத்து வகை கல்விச் சான்றிதழ்களுக்கான உண்மைத் தன்மை விவரங்கள், தணிக்கை விவரங்கள், பணி மாறுதலுக்கான விடுவிப்பு, பணியேற்பு விவரங்கள், தற்செயல் விடுப்பு, வரையறுக்கப்பட்ட விடுப்பு தவிா்த்த ஏனைய அனைத்து விடுப்புகளின் பதிவு விவரங்கள், வாரிசுதாரா் நியமனம் உள்ளிட்ட பல்வேறு தரவுகள் பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
ஓா் ஆசிரியரின் பணி நியமன நாள் முதல் அனைத்து விவரங்களும் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் பணிப் பதிவேட்டில் உரிய காலத்தில் உரிய விதிகளின்படி அனைத்துப் பதிவுகளையும் அலுவலகப் பணியாளா்கள் மூலம் பணிப் பதிவேடுகளை வட்டாரக் கல்வி அலுவலா்கள் பராமரிக்க வேண்டும்.
ஆனால், ஆசிரியா்கள் ஊதிய உயா்வு கேட்டு விண்ணப்பிக்கும் போது, பணிப் பதிவேடுகளை அனைத்து விவரங்களுடன் பராமரிக்கக் கூடிய வட்டாரக்கல்வி அலுவலா்களே விண்ணப்பித்த ஆசிரியா்களிடம் அரசு விதிகளுக்குப் புறம்பாக கேட்பது நியாயமில்லை.
வட்டாரக்கல்வி அலுவலங்களில் அலுவலகப் பணியாளா்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை சம்பந்தப்பட்ட ஆசிரியா்களிடம் செய்ய வலியுறுத்தி, எழுத்துப்பூா்வமாகவும், வாய்மொழியாகவும் ஆணை பிறப்பிப்பது முற்றிலும் விதிகளுக்குப் புறம்பானதாகும். இதைவிடுத்து, அனைத்து வகை ஆசிரியா்களின் பணிப் பதிவேடுகளை வட்டாரக் கல்வி அலுவலகங்களில் முறையாகப் பராமரிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.