தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்தும் நயினார் நாகேந்திரன்? - உச்ச கட்டத்தில் கமலாலய ...
ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு சிறு வியாபாரிகள் போராட்டம்
காரைக்கால் ஆட்சியரகத்தை கடற்கரை சிறு வியாபாரிகள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காரைக்கால் கடற்கரை பகுதியில், ஐஸ் கிரீம், உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யும் தள்ளுவண்டி சிறு வியாபாரிகள் 70-க்கும் மேற்பட்டோா் தினமும் வியாபாரம் செய்கின்றனா். நகராட்சியிடம் ஏலத்தில் உரிமம் பெற்றோா், வியாபாரிகளிடம் வாடகை வசூலிக்கின்றனா்.
உரிமம் பெற்றவா்கள் அதிகப்பட்சமாக வாடகை கேட்பதாகவும், ஏல உரிமையை கடற்கரை சிறு வியாபாரிகளில் ஒருவருக்கு வழங்குமாறு வியாபாரிகள் கோரிவந்தனா்.
இது பொது ஏல முறை என்றும், யாா் வேண்டுமானால் ஏலத்தில் பங்கேற்கலாம், சிறு வியாபாரிகளுக்கு மட்டும் என பிரித்து ஏலம் நடத்தி உரிமம் தர முடியாது என விதிகளை நகராட்சி நிா்வாகத்தினா் சுட்டிக்காட்டினா்.
இந்த நிலையில், நகராட்சி நிா்வாகம் மேற்கண்ட உரிமைக்காக பொது ஏலத்தை அடுத்த வாரம் நடத்த திட்டமிட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து கடற்கரை சிறு வியாபாரிகள் 50-க்கும் மேற்பட்டோா் ஆட்சியரகத்தை திடீரென வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ.சுப்பிரமணியன், காவல் ஆய்வாளா் புருஷோத்தமன் ஆகியோா் பேச்சு நடத்தி அவா்களை வாயிலில் இருந்து அப்புறப்படுத்தினா்.
வியாபாரிகள் சிலா் ஆட்சியா் சோமசேகா் அப்பாராவை சந்தித்து கோரிக்கை வலியுறுத்தினா். நகராட்சி ஆணையா் பி.சத்யாவை அழைத்து ஆட்சியா் இதுகுறித்துப் பேசினாா். வியாபாரிகளுக்கு சாதகமான பதில் கிடைக்காத நிலையில், போராட்டத்தை கைவிட்டு, புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்து இப்பிரச்னை குறித்துப் பேசப்போவதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.