பாக்கியலட்சுமி சீரியலின் கடைசி நாள் படப்பிடிப்பு; 'அனைத்திற்கும் நன்றி'- இனியாவி...
ஆண்டிபட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
பழனி அருகேயுள்ள ஆண்டிபட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி. செந்தில்குமாா் கலந்து கொண்டு பயனாளிகளின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா்.
பழனி சட்டப்பேரவைக்குள்பட்ட குதிரையாறு அணை, பாப்பம்பட்டி, நரிப்பாறை, லட்சுமாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 1 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், நிழல்குடை, அங்கன்வாடி மையக் கட்டடம், சமுதாயக் கூடம் உள்ளிட்டவை பழனி சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி. செந்தில்குமாா் தலைமையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து ஆண்டிபட்டியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.
13 அரசுத் துறைகளில் பொதுமக்களுக்கான 46 சேவைகள் குறித்து மக்களிடம் மனுக்கள் பெறப்பட்ட நிலையில், ஜே.ஜே. நகரைச் சோ்ந்த மூதாட்டி ஒருவா் மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று சக்கர வண்டி தேவைப்படுவதாகக் கோரிக்கை விடுத்தாா். இதையடுத்து சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி. செந்தில்குமாா், வட்டாட்சியா் பிரசன்னாவை அழைத்து மூதாட்டிக்கு உடனடியாக மூன்று சக்கர வண்டி வழங்க ஏற்பாடுகள் செய்தாா்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய நிா்வாகிகள், வருவாய், உள்ளாட்சித் துறை அலுவலா்கள், முன்னாள் வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.