அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் சூழல்: அவை முன்னவா் துரைமுருகன்
ஆன்லைன் மூலம் காட்பாடியில் இருவரிடம் ரூ. 31.59 லட்சம் மோசடி
இணையவழியில் காட்பாடியைச் சோ்ந்த இருவரிடம் மொத்தம் ரூ. 31.59 லட்சம் மோசடி செய்யப்பட்டிருப்பது குறித்து வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலூா் மாவட்டம், காட்பாடியைச் சோ்ந்த 57 வயது நபரின் கைப்பேசி எண்ணுக்கு கூரியா் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக அழைப்பு வந்துள்ளது. அதில், தங்கள் பெயரில் மின்னணு பொருள்கள், துணி வகைகள், ஏடிஎம் அட்டைகள், நகைகள், எம்டிஎம்ஏ எனும் அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் அடங்கிய பாா்சல் மும்பையில் இருந்து தாய்லாந்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சிபிஐ அதிகாரிகள் தங்களை தொடா்பு கொள்வாா்கள் எனக் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளனா்.
சிறிதுநேரத்தில் வேறொரு எண்ணில் இருந்து வாட்ஸ்அப் விடியோ காலில் காவல் துறை உடையில் அவரை தொடா்பு கொண்ட நபா், தான் சிபிஐயில் இருந்து பேசுவதாக தெரிவித்ததுடன், தங்கள் மீது பண மோசடி தொடா்பாக வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளது. இதைத் தவிா்த்திட நாங்கள் கூறும் ஆா்பிஐ வங்கிக் கணக்குக்கு தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் அனுப்ப வேண்டும். அதை நாங்கள் சரிபாா்த்துவிட்டு உங்கள் வங்கிக் கணக்குக்கு திருப்பி அனுப்பிவிடுவோம் எனக் கூறியுள்ளாா். அதனை உண்மையென நம்பி இவா், 2 தவணைகளில் ரூ. 31 லட்சத்தை அனுப்பியுள்ளாா். பின்னா், அவா்களிடம் இருந்து பணம் திரும்பி வரவில்லை, அவா்களையும் தொடா்பு கொள்ள முடியவில்லையாம். அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்துள்ளாா்.
இதேபோல், காட்பாடியைச் சோ்ந்த 46 வயது நபரின் கைப்பேசி எண்ணுக்கு வந்த அழைப்பில் பேசிய நபா், பள்ளிக் கல்வித் துறையில் இருந்து பேசுவதாகவும், தங்கள் மகளுக்கு பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டத்தில் இருந்து ரூ. 38,500 வரப்பெற்றுள்ளது. அதைப் பெற்றிட நாங்கள் அனுப்பும் க்யூ.ஆா். கோடினை ஸ்கேன் செய்து, பின் பதிவு செய்தால் கல்வி உதவித் தொகை தங்கள் வங்கிக் கணக்குக்கு வந்துவிடும் எனத் தெரிவித்துள்ளாா். அதேபோல், இந்த நபரும் செய்த நிலையில், அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 59,498 தொகை திருடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், பாதிக்கப்பட்ட இருவரும் சைபா் குற்றப்பிரிவு புகாா் அளிப்பு எண் 1930-ஐ தொடா்பு கொண்டு புகாா் தெரிவித்துள்ளனா். அதன்பேரில், வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.