குட்கா விற்ற 5 கடைகளுக்கு சீல்: ரூ.1.50 லட்சம் அபராதம்
வேலூா் மாவட்டத்தில் குட்கா விற்பனை தொடா்பாக 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, ரூ.1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
குட்கா பொருள்கள் விற்பனையை கட்டுப்படுத்த ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவின்பேரில் உணவுப் பாதுகாப்புத் துறையினா், மாவட்ட காவல் துறை இணைந்து பல இடங்களில் திடீா் சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த சோதனையின்போது குட்கா பொருள்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப் பட்ட கடைகளுக்கு சீல் வைத்து அபராதமும் விதிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் அருகிலுள்ள பெட்டிக் கடைகள், மளிகைக்கடைகளில் போதைப் பொருள்கள் விற்பதை தடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் செந்தில் குமாா் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் ராஜேஷ், நந்தினி, காயத்ரி உள்ளிட்டோா் வேலூா் அப்துல்லாபுரம் அருகே பொய்கை பகுதியில் சனிக்கிழமை திடீா் ஆய்வில் ஈடுபட்டனா். அப்போது ஒரு பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டு அந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்ததுடன், அங்கிருந்து 2 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமையாளருக்கு ரூ.25,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இதேபோல், வேலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். தொடா்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, குட்கா பொருள்கள் விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.