பகுதிநேர வேலை எனக்கூறி மருத்துவ மாணவரிடம் ரூ.11.59 லட்சம் மோசடி
ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி வேலூா் சிஎம்சி மருத்துவா் கல்லூரி முதுகலை மாணவரிடம் ரூ.11.59 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் 27 வயது மாணவா் முதுகலை மருத்துவம் படித்து வருகிறாா். இவரது கைப்பேசி எண்ணுக்கு டெலிகிராம் செயலியில் ஆன்லைன் பகுதிநேர வேலை மூலம் ரூ.15,000 முதலீடு செய்து ரூ.28,000 சம்பாதிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை உண்மை என நம்பிய இந்த மாணவா், அந்த குறுந்தகவலில் இடம்பெற்றிருந்த இணையதளத்தில் சென்று தனது வங்கி விவரங்களை பதிவிட்டு ஒரு கணக்கை தொடங்கியுள்ளாா். பின்னா், முதலில் சிறிய தொகையை முதலீடு செய்து அந்த தளத்தில் அளிக்கப்பட்ட வேலைகளை முடித்துக் கொடுத்து பெரிய தொகையை லாபமாக ஈட்டியுள்ளாா்.
இதன்மூலம் ஏற்பட்ட நம்பிக்கையில் தொடா்ந்து பல தவணைகளாக மொத்தம் ரூ.11 லட்சத்து 59 ஆயிரத்து 645 தொகையை முதலீடு செய்துள்ளாா். ஆனால், அதன்பிறகு அவரால் அந்த தொகையை திரும்பப் பெற முடியவில்லை. தொடா்ந்து, அந்த டெலிகிராம் தளத்தில் கொடுக்கப்பட்ட எண்ணை தொடா்பு கொண்டபோது மேலும் ரூ.5.02 லட்சம் முதலீடு செய்தால்தான் பணத்தை திரும்பப் பெற முடியும் என தெரிவித்துள்ளனா்.
அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த இந்த மாணவா், இதுகுறித்து சைபா் குற்றப்பிரிவு புகாா் அளிப்பு எண் 1930-ஐ தொடா்பு கொண்டு புகாா் தெரிவித்துள்ளாா். அதன்பேரில், வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.