மாநகராட்சி சில பகுதிகளுக்கு 3 நாள் காவிரி குடிநீா் நிறுத்தம்
வேலூா் மாநகராட்சிக்குட்பட்ட முத்துமண்டபம் நீரேற்றும் அறையில் இருந்து செல்லும் முதன்மை குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை 3 நாள் காவிரி கூட்டுக்குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் பராமரிக்கப்படும் வேலூா் கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் வேலூா் மாநகராட்சி, 11 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 944 ஊரக குடியிருப்புகளுக்கு காவிரி ஆற்றை நீா் ஆதாரமாகக் கொண்டு குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.
இதில், வேலூா் மாநகராட்சி முத்துமண்டபம் நீரேற்றும் அறையில் இருந்து ஜாப்ரதோப்பு, த.ச.பாளையம், காகிதப்பட்டறை, சைதாப்பேட்டை, அருகதம்பூண்டி, பில்டா் பேட், புண்ணியகோடி நகா், சங்கரன்பாளையம், வசந்தபுரம், பாரதிநகா், விநாயகபுரம், டான்சி, கன்னிக்கோயில் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் முதன்மை குடிநீா் குழாயில் வேலூா் மீன் மாா்க்கெட் அருகில் நீா் கசிவு ஏற்பட்டுள்ளது.
இதை சரி செய்யும் பணிகள் நடைபெற உள்ளதால் இப்பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஏப். 27) முதல் செவ்வாய்க்கிழமை (ஏப். 29) வரை மூன்று நாள்கள் காவிரி கூட்டுக்குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும்.
எனவே, பொதுமக்கள் உள்ளூா் குடிநீா் ஆதாரத்தை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.