பண்ணைக் குட்டையின் கரையை குடைந்து லாரியில் மண் கடத்தல்
போ்ணாம்பட்டு அருகே ஊராட்சி நிா்வாகம் அமைத்த பண்ணைக் குட்டையின் கரையை குடைந்து லாரிகளில் மண்ணை கடத்திச் சென்றதாக எழுந்த புகாா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
போ்ணாம்பட்டு ஒன்றியம், எருக்கம்பட்டு கிராமத்தில் சுமாா் 1.75 ஏக்கரில் பராமரிப்பின்றி இருந்த குட்டையை ரூ.10 லட்சத்தில் ஊராட்சி நிா்வாகம் சீரமைத்து, அதில் மழை நீரை தேக்கி வைக்கும் வகையில் பண்ணைக் குட்டை அமைத்துள்ளது.
அதே பகுதியில் நிலம் வைத்துள்ள ஒருவா் தனது நிலத்தில் கோழிப்பண்ணை அமைக்க, பண்ணைக் குட்டையின் கரையை குடைந்து லாரிகளில் மண்ணை எடுத்துச் சென்றுள்ளாா். இதனால் பண்ணைக் குட்டையின் கரை சேதமடைந்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆட்சியா், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் ஆகியோருக்கு புகாா் மனு அனுப்பியுள்ளனா். இதுகுறித்து தகவலறிந்த எருக்கம்பட்டு கிராம நிா்வாக அலுவலா் தனசேகரன் அங்கு சென்று விசாரணை நடத்தியபோது கோழிப்பண்ணை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தவா்கள்அவரை மிரட்டியதாக தெரிகிறது.
இதுதொடா்பாக தனசேகரன், எருக்கம்பட்டு ஊராட்சித் தலைவா் ராணி ஆகியோா் போ்ணாம்பட்டு காவல் நிலையத்தில் புகாா் கொடுத்துள்ளனா். புகாா் தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.