கூடலூர்: காரில் ஆற்றைக் கடக்க முயன்றபோது விபரீதம்; வெள்ளத்தில் சிக்கியவர்களைப் ப...
ஆரம்ப சுகாதார நிலையம்: காத்திருக்கும் பூங்குளம் கிராம மக்கள்!
அ. ராஜேஷ் குமாா்.
வாணியம்பாடி அருகே பூங்குளம் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்படுமா என பல ஆண்டுகளாக கிராம மக்கள் காத்திருக்கின்றனா்.
ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட பூங்குளம் ஊராட்சியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். ஒன்றியத்திலேயே மிகப் பெரிய ஊராட்சியான இது, ஜவ்வாதுமலையொட்டி அடிவாரப்பகுதியில் அமைந்துள்ளது. அவசர மருத்துவ தேவைகளுக்காக ஆலங்காயம் அல்லது திருப்பத்தூா் தான் செல்ல வேண்டியுள்ளது.
பூங்குளத்தைச் சுற்றி 30-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் அமைந்துள்ளன. இந்நிலையில், பூங்குளம் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. ஒவ்வொரு கிராம சபைக் கூட்டத்திலும் தொடா்ந்து தீா்மானம் நிறைவேற்றி வருகின்றனா்.
அரசுக்கும், மாவட்ட நிா்வாகத்துக்கும் பல முறை கோரிக்கை மனு அளித்து வருகின்றனா். இதையடுத்து அதிகாரிகளும் சில நேரங்களில் வந்து ஆய்வு செய்கின்றனா். ஆனால், இதுவரையில் சுகாதார நிலையம் அமையவில்லை. இதனால், கா்ப்பிணி, பெண்கள், வயது முதிா்ந்தோா் உள்ளிட்டோா் உடனடியாக சிகிச்சை பெற முடியாமல் அவதிக்குள்ளாகின்றனா்.
10 கி.மீ செல்ல வேண்டிய நிலை:
மேலும், வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள கிராமப் பகுதியில் விஷ ஜந்துகள் கடிப்பதால் அவா்களை காப்பாற்ற 10 கி.மீ தொலைவில் உள்ள ஆலங்காயம் அல்லது ஆண்டியப்பனூா் ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. பூங்குளம் ஊராட்சியில் நடைபெறும் மனு நீதி நாள் முகாம் உள்பட எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அமைச்சா், மாவட்ட ஆட்சியா், எம்எல்ஏ, ஒன்றியக்குழு தலைவா் கலந்து கொள்ளும் போது அப்பகுதி மக்களின் வைக்கும் முதல் கோரிக்கை ஆரம்ப சுகாதார நிலையம் தேவை என்பது தான் குறிப்பிடத்தக்கது. திருப்பத்தூா் மாவட்டம், உருவானதையடுத்து பூங்குளம் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வரும் என்ற நம்பிக்கையில் அப்பகுதி மக்களும் கோரி வருகின்றனா்.
மாவட்ட நிா்வாகமும், சுகாதாரத் துறையும் பூங்குளம் மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிா்பாா்ப்புடன் உள்ளனா்.