கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு...
"ஆர்.எஸ்.பாரதி ஒரு ஞாயிற்றுக்கிழமை வக்கீல்..." - கராத்தே தியாகராஜன் ஆவேசம்
‘அரசு நிகழ்ச்சியில் பா.ஜ.க-வை முதல்வர் விமர்சித்தார்... ஆனால், அதே மேடையிலிருந்த பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை’ என்று கடும் சர்ச்சை கிளம்பியிருக்கிறது.
இந்நிலையில், பா.ஜ.க மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன், நயினார் குறித்துக் கூறியிருக்கும் கருத்துகள், அந்தக் கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகின்றன. இதையடுத்து, கராத்தே தியாகராஜனை நேரில் சந்தித்துப் பேசினேன்...

"'பிரதமர் மற்றும் நிதியமைச்சரை விமர்சனம் செய்த முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை' என்ற உங்களின் கருத்துக்கு 'சபை நாகரிகம் என்று ஒன்று இருக்கிறது' என, பதில் கொடுத்திருக்கிறாரே, நயினார்?"
"மேடையில் பேசத் தொடங்கிய முதல்வர் ஸ்டாலின், 'நயினார் நாகேந்திரன் பேசமாட்டார். எனவே, அவரின் சார்பில் நான் பேசுகிறேன்' என, கூறிவிட்டுதான் பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு மேடையிலிருந்த நயினார் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. பிரதமர் மீது உண்மையிலேயே பற்று கொண்டவராக இருந்தால், கூட்டத்திலிருந்து உடனே அவர் வெளிநடப்பு செய்திருக்க வேண்டும். சபை நாகரிகம் கருதிப் பேசவில்லை என்றாலும் நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகாவது அறிக்கை வெளியிட்டிருக்கலாம். குறைந்தபட்சம் எக்ஸ் பக்கத்திலாவது எதிர்ப்பு தெரிவித்திருக்கலாம். ஆனால் இதையெல்லாம் அவர் செய்யவில்லை. எனவேதான் பா.ஜ.க தொண்டனாகக் கேள்வி எழுப்பினேன்"

"ஆனால் மாநிலத் தலைவர் பதவிக்குத் தீவிரமாக நயினார் முயற்சி செய்கிறார். எனவேதான் தனது ஆதரவாளர் மூலமாக அண்ணாமலை இப்படி நெருக்கடி கொடுக்கிறார் எனக் கட்சிக்குள் பேசப்படுகிறதே?"
"இந்த குற்றச்சாட்டில் துளியும் உண்மையில்லை. கடந்த ஆண்டு சிவகங்கைக்கு பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா வந்திருந்தார். அந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட்டு அமைச்சர் மா.சுப்பிரமணியம் வந்ததால் தனது தொகுதிக்குச் சென்றுவிட்டார், நயினார். ஜெ.பி. நட்டா முக்கியமா.. மா.சு முக்கியமா..?. இதேபோல் தமிழக சட்டப்பேரவையிலும் மென்மையாக நடந்து கொள்கிறார். இவ்வாறு தொடர்ச்சியாக மவுனமாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கட்சிக்கு உண்மையாகவும், விசுவாசமாகவும் இருக்க வேண்டும்"

"இவ்வாறு ஆளும்கட்சியுடன் மென்மையான போக்கை நயினார் கடைப்பிடித்து வருவதற்குத் திராவிட கட்சிகளுக்கு அவர் செல்லப்போகிறார். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றெல்லாம் பேசப்படுகிறதே?"
"இப்படிப் பல ரூமர்கள் உலா வந்த வண்ணம் இருக்கின்றன. இது குறித்தும் ஆளும்கட்சியுடன் காட்டும் அதீத நெருக்கம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்ததெல்லாம் அவர்தான் விளக்கம் அளிக்க வேண்டும்"

"சரி தமிழக பா.ஜ.க-வுக்கு மாநிலத் தலைவர் எப்போது அறிவிக்கப்படுவார். இழுபறி நீடிப்பது ஏன்?"
"மாநிலத் தலைவர் தேர்வு குறித்ததெல்லாம் அகில இந்தியத் தலைமைதான் முடிவு செய்யும். மேற்கொண்டு இதில் நான் எந்த கருத்தும் சொல்ல முடியாது"

"'அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் உருவி எடுக்கும் வரை இங்குதான் இருப்பேன்' என அண்ணாமலை கூறியதற்கு 'அறிவாலயத்திலிருந்து ஒரு புல்லைக் கூட பிடுங்க முடியாது" என்கிறாரே ஆர்.எஸ்.பாரதி?"
"ஆர்.எஸ்.பாரதி ஒரு ஞாயிற்றுக்கிழமை வக்கீல். கோர்ட்டுக்கு போகாதவர் அவர். அறிவாலயத்தில் மிக்ஸரும், பகோடாவும் கொடுத்து உட்கார வைத்திருக்கிறார்கள். அவர் எப்படிப்பட்ட வீராதி வீரன், சூராதி சூரன் என்பது எனக்குத் தெரியும். 2004-ம் ஆண்டு ஆர்.எஸ். பாரதியின் மனைவி சென்னை மாநகராட்சி டாக்டராக இருந்தார். அப்போது அவர் சரியாகப் பணியாற்றுவதில்லை. எனவே கொடுங்கையூருக்கு மாற்ற வேண்டும் என அப்போதைய முதல்வர் புரட்சித்தலைவி அம்மாவிடம் ரிப்போர்ட் கொடுத்தேன். அங்குள்ள தூய்மை பணியாளர்களுக்குச் சிகிச்சையளிக்கும் விதமாக வழிவகை செய்தோம். அந்த உத்தரவு வந்ததும் வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் போனவர்தான், ஆர்.எஸ். பாரதி. எனவே அவரையெல்லாம் பேசுவதற்கு அண்ணன் ஸ்டாலின் அனுமதிக்கக் கூடாது"

"2026 தேர்தலில் தி.மு.க-வை வீட்டுக்கு அனுப்புவோம் என்கிறீர்கள். ஆனால் இன்று மக்களவைத் தேர்தல் நடந்தால் கூட 39 இடங்களிலும் தி.மு.க கூட்டணி வெல்லும் எனச் சமீபத்திய கருத்துக்கணிப்பு சொல்கிறதே?"
"இப்படிப் பல கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகும். இதையெல்லாம் வைத்துக்கொண்டு நாம் எந்த இறுதி முடிவுக்கும் வந்துவிட முடியாது. தேர்தல் நேரத்தில் மக்களின் மனநிலை, கூட்டணி போன்றவற்றைப் பொறுத்துத்தான் வெற்றி கிடைக்கும். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கின்றது. அண்ணாமலை தலைமையில்தான் கூட்டணி அமையும். 2026-ம் ஆண்டில் நாங்கள்தான் ஆட்சியைப் பிடிப்போம்"

"எடப்பாடிக்கு எதிராக செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியிருப்பதற்குப் பின்னால் பா.ஜ.க இருக்கிறது எனப் பேசப்படுகிறதே?"
"அண்ணன் செங்கோட்டையன் சீனியர் தலைவர். இப்படி பொது வெளியில் கருத்துக்களைச் சொல்ல மாட்டார். ஆனால் அவரே சொல்லியிருக்கிறார். இருந்தாலும் அது அவர்களின் உட்கட்சி பிரச்னை. இதில் நான் எந்த கருதும் சொல்ல முடியாது"
"'இரட்டை இலை சின்னம் தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் பின்னணியில் பா.ஜ.க இருக்கிறது' என்கிறாரே செல்வப்பெருந்தகை?"
"சின்னம் கொடுப்பதற்கான அதிகாரம் தேர்தல் ஆணையத்திடம்தான் இருக்கிறது. அதுதொடர்பாக ஏராளமான வழக்குகளும் நீதிமன்றத்தில் இருக்கின்றன. இதில், பா.ஜ.க-வுக்கு என்ன தொடர்பு இருக்கிறது? எங்களுக்கு அதில் எந்த சம்பந்தமும் இல்லை. முதலில் செல்வப்பெருந்தகையைக் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. விரைவில் அவரை மாற்றிவிடுவார்கள். நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ.க-வுக்கு 20% வாக்குகள் கிடைத்தது. ஆனால், அறிவாலயத்தின் துணை அமைப்பாகத்தான் காங்கிரஸ் இருக்கிறது"

"'தமிழக அரசின் மசோதாக்கள் மீது ஆட்சேபனைகள் இருந்தால், நீண்ட காலம் அமைதியாக இருந்தது ஏன்?’ என் நீதிமன்றமே கேள்வி எழுப்பியிருக்கிறதே?"
"தி.மு.க ஆளும் கட்சியாக இருந்தால் ஆளுநர்களை எதிர்ப்பார்கள். எதிர்க்கட்சியாக இருந்தால் ஆதரவு தெரிவிப்பார்கள். இதை ஆளுநர் சென்னா ரெட்டி, சுர்ஜித் சிங் பர்னாலா விஷயத்தில் பார்த்தோம். எனவே இவர்களுக்கு ஏற்ற வகையில் ஆளுநர்கள் இருக்க மாட்டார்கள். அவர்கள் சட்டப்படிதான் நடந்து கொள்வார்கள்"
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play