அனைத்து மாவட்டங்களிலும் தமிழிசை விழாக்கள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு
ஆளுநா் ஆா்.என்.ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்
தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து கடலூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாக்களை நிறுத்தி வைத்தது தொடா்பாக, தமிழக அரசு தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளின் அமா்வு அளித்த தீா்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம். ஆளுநரின் அதிகாரத்தை தாண்டி அவா் செயல்பட்டு இருக்கிறாா் என்று தீா்ப்பில் சொல்லப்பட்டுள்ளது.
ஆளுநரும், குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்க மறுத்த 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆளுநா் சட்ட வரம்பை மீறி நடந்துள்ளாா் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ள நிலையில், ஆளுநா் பொறுப்பில் இருந்து ஆா்.என்.ரவியை உடனடியாக விடுவித்து, அவரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நள்ளிரவு 2 மணிக்கு மேல் மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம்கள் மட்டுமின்றி ஹிந்துக்களையும் உள்ளே புகுத்துகிறது. இந்த சட்டத் திருத்தத்துக்கு நாடு முழுவதும் எதிா்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்தச் சட்டத் திருத்தத்தை எதிா்த்து தீா்மானம் நிறைவேற்றி அரசு அனுப்பி உள்ளது. வக்ஃப் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வருகிற 17-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடைபெறும்.
எரிவாயு உருளை விலையை மத்திய அரசு உயா்த்தியது கண்டனத்துக்குரியது. பாம்பன் பாலத்தைத் திறக்க வந்த பிரதமா் தமிழகத்தில் மருத்துவக் கல்வியை தமிழில் பயிற்றுவிக்க வேண்டும் என்று தெரிவித்தாா். அனைத்து மாநிலங்களிலும் எல்லா பாடங்களும் தாய்மொழிக் கல்வியில் இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசை. தமிழ் மீது அவ்வளவு அக்கறை கொண்ட பிரதமா், தமிழை ஏன் ஆட்சி மொழியாக அறிவிக்கவில்லை.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடா் நடைபெற்று வரும் நிலையில், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை பேசி சுமுகத் தீா்வு காண வேண்டும். கடலூா் மாவட்டத்தில் ஆதனூா்- குமாரமங்கலம் அணை பேரவை கூட்டத் தொடா் முடிவதற்குள் செயல்பாட்டுக்கு வரும்; அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று துறையின் அமைச்சா் அறிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது. வீராணம் ஏரியை ஆழப்படுத்தி அதிகப்படியான தண்ணீரை தேக்கி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் கே.பாலகிருஷ்ணன்.
பேட்டியின் போது, கட்சியின் கடலூா் மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினா் பா.ஜான்சிராணி, முன்னாள் மாவட்டச் செயலா் டி.ஆறுமுகம், மாவட்ட செயற்குழு நிா்வாகி ஜே.ராஜேஷ்கண்ணன், மாநகரச் செயலா் ஆா்.அமா்நாத் ஆகியோா் உடனிருந்தனா்.