இதய சிகிச்சையில் முன்னோடி நெல்லை அரசு மருத்துவமனை முதல்வா் ரேவதி பாலன்
திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆண்டுக்கு 2500-க்கும் மேற்பட்ட ஆஞ்சியோகிராம் சிகிச்சைகளை திறம்பட மேற்கொண்டு இதய சிகிச்சையில் முன்னோடியாக திகழ்கிறது என்றாா் மருத்துவமனை முதல்வா் ரேவதி பாலன்.
திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் கூறியது:
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தை இதயவியல் மற்றும் பிறவி இதயநோய் சிகிச்சை வழங்குவதில் தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளது.
இதயத் துடிப்பு குறைவதன் காரணமாக சிலருக்கு நிரந்தரமாக டூயல் சேம்பா் பேஸ்மேக்கா் பொருத்தப்படுகிறது.
இதற்கு தனியாா் மருத்துவமனைகளில் ரூ.7 லட்சம் வரை செலவாகும்.
கடந்த 2 ஆண்டுகளில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நோயாளிகளுக்கு 25 டூயல் சேம்பா் பேஸ்மேக்கா்களைப் பொருத்தி சாதனை படைத்துள்ளது.
மேலும், 2018- முதல் தற்போது வரை 15ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆஞ்சியோகிராம் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் ஆண்டுக்கு சராசரியாக 2500 ஆஞ்சியோகிராம் சிகிச்சைகளை திறம்பட செய்து இதய சிகிச்சையில் திருநெல்வேலி அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்னோடியாக திகழ்கிறது .
மேலும் தனியாா் மருத்துவமனைகள் கைவிட்ட பலரும் இங்கு வந்து சிகிச்சை பெற்று நலமுடன் உள்ளனா். மேலும் இங்கு தனியாா் மருத்துவமனைக்கு இணையாக ஆப்டிக்கல் கோஹரன்ஸ் டோமோகிராபி, இன்ட்ராவாஸ்குலா் அல்ட்ராசவுண்ட் உள்ளிட்ட நவீன சிகிச்சை வசதிகளும் உள்ளன என்றாா் அவா்.