இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களிலேயே மிகப் பயங்கர நிலநடுக்கம் எது? ஏன்?
ரஷியாவுக்கு அருகே கடல் பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து அமெரிக்காவின் ஹவாய் தீவு உள்ளிட்ட பகுதிகளில் சுனாமி அலைகள் வீசின.
ரஷியாவின் கிழக்குத் தொலைதூரப் பகுதியில் அமைந்துள்ள காம்சட்கா தீபகற்பம் அருகே, பசிபிக் கடல் பகுதியில் உள்ளூா் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 11:24 மணிக்கு (இந்திய நேரப்படி புதன்கிழமை காலை 8:54 மணி) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 8.8 அலகுகளாகப் பதிவானது.
இது 2011 டோஹோகு நிலநடுக்கத்திற்குப் பிறகு உலகளவில் பதிவான மிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஒன்றாகப் பதிவாகியிருக்கிறது.
காம்சட்கா பகுதியில் 3 -4 மீட்டா் உயர சுனாமி அலைகள் தாக்கின. செவிரோ-குரில்ஸ்க் துறைமுகம் வெள்ளத்தில் மூழ்கியதில் அங்கிருந்த மீன் பதப்படுத்தும் ஆலை சேதமடைந்தது. அமெரிக்காவின் ஹவாய் தீவுப் பகுதியில், மவுயியின் கஹுலுயி மற்றும் ஹலேயிவாவில் 4 அடி உயர அலைகள் பதிவாகின.
இதுவரை பதிவான நிலநடுக்கங்களிலேயே மிக மோசமான நிலநடுக்கம் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகிறது.
1. பியோபியோ, சிலி
சிலியில் 1960ஆம் ஆண்டு நேரிட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 9.5 அலகுகளாகப் பதிவாகியிருந்தது. இது கிரேன் கிலியன் நிலநடுக்கம் என்று அழைக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 1600 பேர் பலியாகினர். மிகப்பெரிய சுனாமி அலைகள் எழுந்ததில் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.
இதற்கு அடுத்த இடத்தில் இருப்பது அலாஸ்கா நிலடுக்கம்
கடந்த 1964ஆம் ஆண்டு 9.2 அலகுகளில் பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கம் அலாஸ்காவின் பிரின்ஸ் வில்லியம சௌணட் பகுதியை உலுக்கியது. இது கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் வரை நீடித்தது. 130 பேர் பலியாகினர். அமெரிக்காவில் பதிவான மிக மோசமான நிலநடுக்கமாக இது உள்ளது.
கடல் அலைகள் எழுந்து பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தை அடுத்து தொடர்ந்து நில அதிர்வுகள் உணரப்பட்டன.
மூன்றாவது நிலநடுக்கம் உலகையே புரட்டிப்போட்டது
நிலநடுக்கத்தின் அளவில் மூன்றாவது இடத்தில் இருந்தாலும் பாதிப்புகளில் இதற்கு எப்போதும் முதலிடம்தான். 2004ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 9.1 ரிக்டரில் பதிவாகியிருந்தது. இதனால் ஏற்பட்ட சுனாமி எனும் ஆழிப்பேரலை தெற்காசியா மற்றும் ஆப்ரிக்களை நாடுகளைத் தாக்கியது. 2,30,000 பேர் பரியாகினர். இந்தோனேசியாவில் மட்டும் 1,67,000 பேர் பலியாகினர். பல பகுதிகள் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டிருந்தது.
இதே அளவு கோலில் 2011ஆம் ஆண்டு வடகிழக்கு ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டு அதனைத் தொடர்ந்து சுனாமியும் உருவானது. இதில் 18,000 பேர் பலியாகினர். பலர் காணாமல் போயினர்.
நான்காவதாக, மீண்டும் ரஷியாவின் காம்சட்கா தீபகற்பம்ததான் உள்ளது. இங்கு 1952ஆம் ஆண்டு ரிக்டரில் 9 என்ற அலவுகோலில் பதிவான நிலநடுக்கத்தினால் 30 அடிக்கு சுனாமி அலைகள் எழுந்தன. இதில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. ஆனால் உயிரிழப்புகள் பதிவாகவில்லை.
இதே தீபகற்பத்தில்தான் நேற்று மீண்டும் பயங்கர நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. தொடர்ந்து இன்றும் ரஷியாவில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.