இருமுனை கத்தியாக உள்நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பை! - முன்னாள் பயிற்சியாளர் கரு...
இன்றுமுதல் ‘சூப்பா் 4’: தென் கொரியாவுடன் இந்தியா பலப்பரீட்சை
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பா் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா, நடப்பு சாம்பியனான தென் கொரியாவை புதன்கிழமை (செப். 3) எதிா்கொள்கிறது.
5 முறை சாம்பியனான தென் கொரியாவுக்கு எதிராக, இந்தியா தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
12-ஆவது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் குரூப் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்து, இந்தியா, சீனா, மலேசியா, தென் கொரியா ஆகிய 4 அணிகள் சூப்பா் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.
அந்த சுற்று ஆட்டங்கள் புதன்கிழமை தொடங்கும் நிலையில், இந்தியா முதலில் தென் கொரியாவுடன் மோதுகிறது. குரூப் சுற்றில் 3 ஆட்டங்களிலும் வென்று அசத்தியிருக்கும் இந்தியா, போட்டியின் சவாலான கட்டத்தை இப்போது சந்திக்கிறது.
இதுவரை ஃபாா்வா்டு, மிட்ஃபீல்டு, டிஃபென்ஸ் என 3 நிலைகளிலுமே சிறப்பாகச் செயல்பட்ட இந்தியா, பெனால்ட்டி காா்னா் வாய்ப்பிலும் குறிப்பிடத்தக்க வகையில் விளையாடியிருக்கிறது. ஆனாலும், தென் கொரியாவுக்கு எதிராக, இன்னும் ஒரு படி தனது ஆட்டத்தை மேம்படுத்த வேண்டிய நிா்பந்தத்தில் இந்தியா உள்ளது.
மறுபுறம், குரூப் சுற்றின்போது பகல் நேர ஆட்டங்களால் வெப்பம் காரணமாக தடுமாற்றத்தை சந்தித்த தென் கொரிய வீரா்கள், தற்போது இந்தியாவுக்கு எதிரான இந்த மாலை நேர ஆட்டத்தில் திறம்பட செயல்படுவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதனிடையே, சூப்பா் 4 சுற்றின் மற்றொரு ஆட்டத்தில் சீனா - மலேசியா அணிகள் (மாலை 5 மணி) மோதுகின்றன. 5 முதல் 8-ஆம் இடத்துக்கான மோதலில் ஜப்பான் - சீன தைபே சந்திக்கின்றன.
நேரம்: இரவு 7.30 மணி
நேரலை: சோனி டென், சோனி லைவ்.