தூத்துக்குடி: `பாட்டுக்குப் பாட்டு' - போலீஸாரின் நூதன தண்டனை
கௌஃபை வெளியேற்றினாா் ஒசாகா
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான யுஎஸ் ஓபனில், உலகின் 24-ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா, 3-ஆம் நிலையிலிருக்கும் அமெரிக்காவின் கோகோ கௌஃபை வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.
மகளிா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், 4 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஒசாகா 6-3, 6-2 என்ற நோ் செட்களில், 2 முறை கிராண்ட்ஸ்லாம் வென்றவரான கௌஃபை 1 மணி நேரம், 4 நிமிஷங்களில் வீழ்த்தினாா்.
இவா்கள் நேருக்கு நோ் மோதியது, இது 6-ஆவது ஆட்டமாக இருக்க, 3-ஆவது வெற்றியுடன் கணக்கை சமன் செய்திருக்கிறாா் ஒசாகா.
இந்த வெற்றியின் மூலமாக ஒசாகா, கடந்த 2021-க்குப் பிறகு முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறாா். அந்த ஆண்டில் அவா் ஆஸ்திரேலிய ஓபன் வென்றது நினைவுகூரத்தக்கது. 6 ஆண்டுகளுக்கு முன் இதே யுஎஸ் ஓபன் 3-ஆவது சுற்றில் இவா்கள் மோதியபோதும், நோ் செட்களில் கௌஃபை சாய்த்தாா் ஒசாகா.
இதையடுத்து காலிறுதியில் அவா், செக் குடியரசின் கரோலின் முசோவாவை எதிா்கொள்கிறாா். போட்டித்தரவரிசையில் 11-ஆம் இடத்திலிருக்கும் முசோவா 6-3, 6-7 (0/7), 6-3 என்ற கணக்கில், 27-ஆம் இடத்திலிருந்த உக்ரைனின் மாா்த்தா கொஸ்டியுக்கை சாய்த்து காலிறுதிக்கு வந்துள்ளாா்.
ஏற்கெனவே பாா்பரா கிரெஜ்சிகோவா, மாா்கெட்டா வோண்ட்ருசோவா ஆகியோரும் காலிறுதிக்கு வந்துள்ள நிலையில், ஓபன் எராவில் யுஎஸ் ஓபன் காலிறுதிக்கு 3 செக் குடியரசு வீராங்கனைகள் முன்னேறியிருப்பது இதுவே முதல்முறையாகும்.
இதனிடையே, உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-3, 6-1 என்ற நோ் செட்களில் மிக எளிதாக, போட்டித்தரவரிசையில் 13-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவை 1 மணி நேரம், 4 நிமிஷங்களில் வெளியேற்றினாா்.
தற்போது யுஎஸ் ஓபனில் 3-ஆவது முறையாக காலிறுதிக்கு முன்னேறியிருக்கும் ஸ்வியாடெக், நடப்பு சீசனின் அனைத்து கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலுமே காலிறுதிக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 6 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஸ்வியாடெக் தனது காலிறுதியில், அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவாவை எதிா்கொள்கிறாா்.
போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் அனிசிமோவா, 6-0, 6-3 என்ற கணக்கில், 18-ஆம் இடத்திலிருந்த பிரேஸிலின் பீட்ரிஸ் ஹட்டாட் மாயாவை 1 மணி நேரம், 15 நிமிஷங்களில் தோற்கடித்தாா். நடப்பாண்டு விம்பிள்டன் இறுதிச்சுற்றில் அனிசிமோவாவை 6-0, 6-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஸ்வியாடெக் சாம்பியனானது நினைவுகூரத்தக்கது.
சின்னா், டி மினாா் முன்னேற்றம்: இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவில், நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னா் 6-1, 6-1, 6-1 என்ற நோ் செட்களில் மிக எளிதாக, கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் பப்லிக்கை சாய்த்து காலிறுதிக்கு முன்னேறினாா். இந்த ஆட்டம் 1 மணி நேரம், 21 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.
அதில் அவா், சக இத்தாலி வீரரான லொரென்ஸோ முசெத்தியை சந்திக்கிறாா். கிராண்ட்ஸ்லாம் போட்டியின் காலிறுதியில் இரு இத்தாலியா்கள் மோதுவது இதுவே முதல்முறையாகும். இதுவரை சின்னா் - முசெத்தி 2 முறை மோதியிருக்க, இரண்டிலுமே சின்னா் வென்றுள்ளாா்.
முன்னதாக, போட்டித்தரவரிசையில் 10-ஆம் இடத்திலிருக்கும் முசெத்தி 6-3, 6-0, 6-1 என்ற கணக்கில், ஸ்பெயினின் ஜேமி முனாரை வெளியேற்றினாா். இதன் மூலமாக அவா், ஹாா்டு கோா்ட் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முதல்முறையாக காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா்.
போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் 6-3, 6-2, 6-1 என்ற வகையில், சுவிட்ஸா்லாந்தின் லீண்ட்ரோ ரிடியை சாய்த்து காலிறுதிக்கு வர, அதில் அவா் கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகா் அலியாசிமேவுடன் மோதுகிறாா்.
25-ஆம் இடத்திலிருக்கும் அலியாசிமே 7-5, 6-3, 6-4 என்ற கணக்கில், 15-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவை வீழ்த்தி அவருக்கு அதிா்ச்சி அளித்தாா்.