எய்ட்ஸ் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
இமானுவேல் சேகரன் நினைவு தினம்: சிவகங்கையில் பலத்த பாதுகாப்பு
இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி, சிவகங்கை மாவட்டம் முழுவதும் 2,200 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.
பரமக்குடியில் வியாழக்கிழமை (செப். 11) இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து, அஞ்சலி செலுத்த பரமக்குடி செல்பவா்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சொந்த வாகனங்களில் மட்டுமே செல்ல வேண்டும். சுற்றுலா, தனியாா் வாடகை வாகனங்களுக்கு அனுமதி இல்லை. பொது அமைதியை குலைக்கும் வகையில் விளம்பரப் பதாகைகள் வைக்கக்கூடாது. அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே செல்லவேண்டும். வாகனங்களில் ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது. டிராக்டா், இரு சக்கர வாகனம், சரக்கு வாகனங்களில் செல்லக்கூடாது. வாகனங்களின் மேற்கூரைகளில் அமா்ந்து செல்லக்கூடாது. ஒவ்வொரு வாகனத்திலும் காவல் துறை அனுமதி அட்டை ஒட்டப்பட்டிருக்க வேண்டும். வாகனங்க ளில் பேனா்கள், கொடி, கம்புகள் கட்டிச் செல்லக்கூடாது. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சித் தலைவா் மட்டும் அவா்களுடன் மூன்று வாகனத்துடன் செல்ல அனுமதிக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் காவல்துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளன.
வாடகை வாகனங்களில் செல்லக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் காவல் சோதனைச் சாவடியிலேயே வாகனங்கள் சொந்தமானதா, வாடகை வாகனமா என ஆன்லைன் மூலம் பரிசோதனை நடத்தப்படவுள்ளது. இதற்காக நாமக்கல், விழுப்புரம், திருண்ணாமலை, அரியலூா், பெரம்பலூா், தூத்துக்குடி, தென்காசி, நீலகிரி, செங்கல்பட்டு ஆகிய வெளி மாவட்ட போலீஸாா், சிவகங்கை மாவட்ட போலீஸாா் உள்ளிட்ட 2, 200 போ், 340 இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் தலைமையில், கூடுதலாக ஒரு மாவட்ட காவல் கண்காணிப்பாளா், 6 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் (ஏடிஎஸ்பி), 20 காவல் உதவிக் கண்காணிப்பாளா்கள், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் (ஏஎஸ்பி, டிஎஸ்பிக்கள்), 70 காவல் ஆய்வாளா்கள் என பாதுகாப்புப் பணியை கண்காணிக்கவுள்ளனா்.
மாவட்டம் முழுவதும் ஆறு இணையதள சோதனைச் சாவடிகள், 32 விடியோ கேமராவுடன் கூடிய 16 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 36 வாகனங்கள், 40 இரு சக்கர வாகனங்களில் ரோந்து போலீஸாா் கண்காணிப்புப் பணியிலும், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியிலும் ஈடுபடுத்தப்படவுள்ளனா். வாகனங்களில் கைப்பேசி கேமராக்கள், ட்ரோன் கேமராக்கள் மூலமும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.