சிங்கம்புணரி அருகே இரவு நேர மின் தடையால் பொதுமக்கள் அவதி
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள கிராமங்களில் இரவு நேர மின் தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
சிங்கம்புணரி அருகேயுள்ள கிருங்காகோட்டை, முட்டாக்கட்டி, மேலப்பட்டி, ஒடுவன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில நாள்களாக மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதனால், அந்தக் கிராமங்களிலுள்ள பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
மேலும், இந்தப் பகுதிகளில் தாழ்வாகச் செல்லும் மரக்கிளைகள் மின் கம்பிகளில் சிக்குவதால் அடிக்கடி மின் தடையும் ஏற்படுகிறது. எனவே, மின்வாரியம் இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுத்து மின் விநியோகம் சீராக வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.