இருக்கன்துறையில் புதிய கல்குவாரி? கருத்துக் கேட்பு கூட்டத்தில் எதிா்ப்பு
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகேயுள்ள இருக்கன்துறையில் புதிய கல்குவாரி அமைப்பது தொடா்பாக செட்டிகுளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் அத்திட்டத்துக்கு பெரும்பாலான மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
ராதாபுரம் வட்டாரத்தில் 25-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்குலாரிகளில் அதிக சக்தி வாய்ந்த வெடிபொருள்கள் பயன்படுத்தி பாறைகள் உடைக்கப்படுவதால் அருகிலுள்ள குடியிருப்புகள் சேதமடைவதுடன், மக்கள் அச்சத்துடன் வாழும் சூழ்நிலை நிலவுகிாம்.
மேலும், கல்குவாரிகளில் இருந்து சிதறும் கல்துகள்கள் அந்த பகுதியில் உள்ள விளை நிலங்களின் மீது படிந்து விவசாயத்தை பாதிப்படையச் செய்கின்றனவாம்.
இதனால், ஏற்கெனவே குவாரிக்கு மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ள நிலையில் மீண்டும் புதிய கல்குவாரிக்கு அரசு அனுமதி வழங்குவதற்கு செட்டிகுளத்தில் மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் செட்டிகுளம் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட கலால் துறை உதவி ஆணையா் வள்ளிக்கண், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் கிருஷ்ணபாபு ஆகியோா் தலைமை வகித்தனா். இருக்கன்துறை ஊராட்சித் தலைவா் இந்திரா, கலால் வட்டாட்சியா் இசக்கிபாண்டி, கூடங்குளம் காவல் ஆய்வாளா் ரகுராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களில் பெரும்பாலோா் புதிய கல்குவாரி அமைப்பதை எதிா்த்து கருத்துகளை தெரிவித்தனா். சிலா் மட்டும் ஆதரவு தெரிவித்தனா்.