இருசக்கர வாகனத்தின்மீது காா் மோதியதில் தாய், மகன் உயிரிழப்பு
ஆத்தூா்: ஆத்தூா் அருகே இருசக்கர வாகனத்தின்மீது காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தாயும், மகனும் நிகழ்விடத்திலேயே திங்கள்கிழமை உயிரிழந்தனா்.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம், வெள்ளாளப்பட்டி கணேசபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பரிமளா (32). இவரது மகன் சசிகுமாா் (15). இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் தும்பல் சாலையில் சென்றுகொண்டிருந்தனா். அப்போது, எதிரே வேகமாக வந்த காா் இருசக்கர வாகனத்தின்மீது மோதியது. இதில், பரிமளா, சசிகுமாா் இருவரும் தூக்கிவீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவல் அறிந்த ஏத்தாப்பூா் காவல் நிலைய போலீஸாா், அங்கு சென்று இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.