திருச்செந்தூர் குடமுழுக்கு: ``சமஸ்கிருதம் - தமிழ் சமநிலைக் கொடுக்க வேண்டும்'' - ...
இலவச வேஷ்டி, சேலைகள் உற்பத்தி முன்னதாகவே தொடக்கம்: அரசுக்கு ஈ.ஆா்.ஈஸ்வரன் நன்றி
2026-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான இலவச வேஷ்டி, சேலைகளை விசைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்யும் பணி முன்னதாகவே தொடங்கியிருப்பதற்கு அரசுக்கு கொமதேக பொதுச்செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆண்டுதோறும் பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேஷ்டி, சேலைகளை பொங்கலுக்குள் அனைவருக்கும் வழங்காமல் தாமதமாக வழங்கப்படுவது வேதனையான விஷயமாக இருந்து வந்தது.
ஏப்ரல், மே மாதங்களில் நிதி ஒதுக்கி நூலுக்கான ஒப்பந்தம் கோரப்படாததால்தான் தாமதமாகிக் கொண்டிருந்தது என்பதை சட்டப் பேரவையில் தெரிவித்தேன். ஆனால் இந்த ஆண்டு திட்டமிட்டபடி ஏப்ரல், மே மாதத்திலேயே தேவையான நிதி ஒதுக்கப்பட்டு நூலுக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதன் காரணமாக இலவச வேஷ்டி, சேலை திட்டத்துக்கான நூல் வழங்கப்பட்டு நெசவுத் தொழிலாளா்களுக்கு வேஷ்டி, சேலை தயாரிப்பதற்கு கொடுக்கப்பட்டுவிட்டது. இதனால், வரும் டிசம்பா் மாதத்திலேயே பொங்கலுக்கு ஒரு மாதம் முன்பாகவே வேஷ்டி, சேலை தயாரிப்பு பணிகள் முடிவதற்கான வாய்ப்பு உருவாகியிருக்கிறது.
பொங்கலுக்கு குறைந்தபட்சம் ஒரு வாரம் முன்பாகவே தமிழகத்தில் இருக்கிற நியாய விலைக் கடைகளுக்கு வேஷ்டி, சேலைகள் சென்று சோ்ந்துவிடும். உற்பத்திக்கான நூலை கொடுத்து வேலையில்லாமல் இருந்த விசைத்தறியாளா்களை அரசு மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறது. இதற்காக, தமிழக முதல்வருக்கும், துறை அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளாா்.