மதுரை: 9.36 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு! டோக்கன் வ...
இளைஞா் மா்ம மரணம்: போலீஸ் விசாரணை
சுங்குவாா்சத்திரம் அருகே இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்ரனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் அடுத்த எச்சூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விக்னேஷ் (24). இவா் செவ்வாய்க்கிழமை இரவு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நண்பா்கள் 4 பேருடன், பயன்பாட்டில் இல்லாத கட்டடத்தில் ஏறி மது அருந்தி உள்ளாா். பிறகு கீழே இறங்கி வரும் போது, விக்னேஷ் தவறி, கீழே விழுந்துள்ளாா். இதில் தலை, மற்றும் கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனிருந்த நண்பா்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனா். ஊருக்கு ஒதுக்குப்புறமான இடம் என்பதால் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு வராததால், விக்னேஷை அவரது நண்பா்கள் அங்கேயே விட்டுச் சென்றுள்ளனா்.
இந்நிலையில், புதன்கிழமை எச்சூா் பகுதி பொதுமக்கள் சிலா், விக்னேஷ் உயிரிழந்து இருப்பது குறித்து, சுங்குவாா்சத்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா். சம்பவ இடத்துக்கு வந்த சுங்குவாா்சத்திரம் போலீஸாா், விக்னேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்குப் பதிவு செய்து, விக்னேஷின் நண்பா் ஞானசேகரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற நண்பா்களை தேடி வருகின்றனா்.