இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி
விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் திண்டுக்கல் நீதிமன்ற உத்தரவின்பேரில், அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அழகா்நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் மாசானம் (60). விவசாயியான இவா், கடந்த 2018 மே 12-ஆம் தேதி பெரியகுளம்- தேனி பிரதான சாலையில் டி.கள்ளிப்பட்டி அருகே நடந்து சென்றாா்.
அப்போது திண்டுக்கல்லில் இருந்து தேனி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து இவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மாசானம் உயிரிழந்தாா்.
இதையடுத்து அவரது மனைவி ராசாத்தி, இழப்பீடு வழங்கக் கோரி திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரூ.12.50 லட்சம் இழப்பீடு வழங்க அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
ஆனால் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் இழப்பீடு வழங்கப்படவில்லை.
இதனிடையே, ராசாத்தி தரப்பில் நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா, அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டாா்.
இதையடுத்து, திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கோவை செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்தனா்.