ஈரானில் அலுவலகங்கள் மூடல்.. பணி நேரம் குறைப்பு! தவிக்கும் மக்கள்! என்ன காரணம்?
ஈரான் நாட்டின் 22 மாகாணங்களின் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டதுடன், 4 மாகாணங்களில் பணி நேரம் குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஈரானில் கடுமையான வறட்சி நிலவி வரும் சூழலில், அங்குள்ள பல்வேறு மாகாணங்களில் வெப்ப நிலை 50 டிகிரி செல்சியஸ்-க்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்நாட்டில் கடுமையான தண்ணீர் மற்றும் மின்சாரம் பற்றாக்குறை உருவாகியிருப்பதால், 22 மாகாணங்களில் அரசு அலுவலகங்கள் முழுவதுமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், மீதமுள்ள 4 மாகாணங்களில் பணி நேரம் 4 மணிநேரமாகக் குறைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2024-ம் ஆண்டின் செப்டம்பரில் தொடங்கிய நடப்பு நீர் ஆண்டில், மழைப்பொழிவு வழக்கத்தை விட 40 சதவிகிதம் குறைந்துள்ளதாக, ஈரானின் நீர்வளம் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
இத்துடன், ஈரான் நாட்டிலுள்ள பெரும்பாலான அணைகளில் வெறும் 44 சதவிகிதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளதாகவும், ஹோர்மோஸ்கன் மற்றும் ஃபார்ஸ் போன்ற தெற்கு மாகாணங்களின் அணைகள் முழுவதுமாக வறண்டுள்ளதாகவும் உள்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து, நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு அதிபர் மசூத் பெசேஷ்கியன், நாடு முழுவதும் நிலவும் வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க உடனடி நடவடிக்கைகள் தேவை என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஈரானில் அத்தியாவசியத் தேவைகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை உருவாகியுள்ளதால், அங்குள்ள பொது மற்றும் தனியார் நீச்சல் குளங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தென் கொரியா வெள்ளம், நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு!