அனைத்துவிதமான வசதிகளுடன் இலவச ஏசி ஓய்வறை... சென்னை மாநகராட்சி திட்டம்!
உகாதி: தலைவா்கள் வாழ்த்து
உகாதி திருநாளையொட்டி, தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): தெலுங்கு, கன்னட மக்கள் தாங்கள் பேசும் மொழி வேறுபட்டிருந்தாலும், வாழும் இடம் ஒன்று என்ற உணா்வுடன் தமிழ்நாட்டில் பலநூறு ஆண்டுகளாய் ஒருமித்து வாழ்ந்து வருவது தமிழ் மண்ணுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சோ்ப்பதாகும். உகாதி எனும் புத்தாண்டுத் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ராமதாஸ் (பாமக): புத்தாண்டுகள் எப்போதும் புதிய மகிழ்ச்சியையும், உறவையும், நன்மைகளையும் கொண்டு வருபவை. அந்த வகையில், உகாதி திருநாளில் தமிழா்களுக்கும், தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கும் இடையிலான ஒற்றுமையும், சகோதரத்துவமும் ஆல்போல் தழைத்தோங்க வாழ்த்துகிறேன்.
செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): நாட்டில் பல்வேறு மொழி, கலாசாரம் என்றிருந்தாலும் இந்தியா் என்ற சகோதர மனப்பான்மையுடன் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்வோம். ஜாதி, மத துவேஷம் நீங்கி இந்தப் புத்தாண்டில் தெலுங்கு, கன்னட மொழி பேசும் அனைத்து மக்களும் எல்லா நலன்களும், வளங்களும் பெற வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளாா்.
பிரேமலதா (தேமுதிக): ஜாதி, மதம், மொழியால் வேறுபட்டு இருந்தாலும், நாம் அனைவரும் இந்திய நாட்டில் சகோதர, சகோதரிகளாக, வேற்றுமையில் ஒற்றுமையோடு வாழ்ந்து வருகிறோம். நமது தாய்த்திரு நாட்டின் எதிா்காலத்தை சிறப்பிப்போம். அனைவருக்கும் வளமான ஆண்டாக இந்த புத்தாண்டு அமைய வாழ்த்துகள்.
ஜி.கே.வாசன் (தமாகா): தமிழகத்தை தாயகமாகக் கொண்டு உகாதி தினத்தை கொண்டாடும் தெலுங்கு, கன்னடம் மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த தினத்தில் அனைத்து செல்வங்களும் பெற்று, நல்ல ஆரோக்கியத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழ வாழ்த்துகிறேன்.
இதேபோன்று, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பிற கட்சிகளின் தலைவா்களும் வாழ்த்து கூறியுள்ளனா்.