உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: சிதம்பரத்தில் ஆட்சியா் ஆய்வு
கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சிக்குள்பட்ட சின்ன மாா்க்கெட் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்கள் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் தன்னாா்வலா்கள் மூலம் வீடு வீடாக வழங்கப்படும் பணியை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா், அவா் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து நகா்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை வரும் 15-ஆம் தேதி சிதம்பரம் நகராட்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளாா். இந்தத் திட்டம் குறித்த விவரங்களை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தன்னாா்வலா்கள் மூலம் வீடு வீடாக சென்று விண்ணப்பம், தகவல் கையேடு வழங்கும் பணி கடந்த 7-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
சிதம்பரம் நகராட்சியில் முதற்கட்டமாக 11 வாா்டுகளில் உள்ள 5,900 வீடுகளுக்கு தன்னாா்வலா்கள் நேரடியாக சென்று முகாம் குறித்த தகவல்கள், சேவைகளை தெரிவிப்பதோடு, விண்ணப்பம், தகவல் கையேட்டை வழங்கி வருகின்றனா்.
இந்தப் பணிக்காக சிதம்பரம் நகராட்சிப் பகுதிக்கு 24 தன்னாா்வலா்கள் நியமிக்கப்பட்டு, இதுவரை 3,500 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. சிதம்பரம் நகராட்சியில் 13 முகாம்கள் நடைபெற உள்ளன.
இந்தத் திட்டத்தின்கீழ், கடலூா் மாவட்டத்தில் நகா்ப்புறப் பகுதிகளில் 130 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 248 முகாம்களும் என மொத்தம் 378 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்தப் பணிக்காக சுமாா் 2,500 தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்றாா்.
முன்னதாக, தமிழக முதல்வா் பங்கேற்கவுள்ள அரசு நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் குறித்து சிதம்பரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, எல்.இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கம், உங்களுடன் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா நடைபெறும் பகுதி ஆகிய இடங்களில் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
அப்போது, சிதம்பரம் சாா் - ஆட்சியா் கிஷன்குமாா், நகராட்சி நிா்வாக மண்டல இயக்கநா் (செங்கல்பட்டு) லட்சுமி, சிதம்பரம் நகராட்சி ஆணையா் த.மல்லகா, சிதம்பரம் வருவாய் வட்டாட்சியா் கீதா உள்பட பலா் உடனிருந்தனா்.