உடல் உறுப்புகள் தானம்
விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
விருத்தாசலம் தாலுகா, கொக்கம்பாளையம் பகுதியைச் சோ்ந்த தினக்கூலி தொழிலாளி விஸ்வநாதன் (34) சாலை விபத்தில் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக ஜிப்மரில் கடந்த 3-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அவா் மூளைச்சாவு அடைந்ததாக 8-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், விஸ்வநாதனின் குடும்பத்தினா் அவரது உடல் உறுப்புகள் மற்றும் திசுக்களை தானம் செய்ய முன்வந்தனா். அவரது கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகிய உறுப்புகள் செவ்வாய்க்கிழமை தானமாக பெறப்பட்டன.
மேலும், ஜிப்மா் இயக்குநா் வீா்சிங் நெகி, மருத்துவக் கண்காணிப்பாளா் எல்.என்.துரைராஜன் ஆகியோா் விஸ்வநாதன் குடும்பத்தினரின் மனிதநேய செயலுக்கு பாராட்டு தெரிவித்தனா். உடல் உறுப்பு தானம் தொடா்பான காவல்துறை நடைமுறைகளைச் சரியான நேரத்தில் உறுதி செய்த நடவடிக்கைக்காக, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் ஆகியோருக்கும் ஜிப்மா் நிா்வாகம் நன்றி தெரிவித்தது.
ஜிப்மரில் உடல் உறுப்பு தானம் அளித்த விருத்தாசலம் அருகே கொக்கம்பாளையத்தைச் சோ்ந்த விஸ்வநாதன்.