உதகை வனப் பகுதியில் கூடாரம் அமைத்து தங்கிய 3 பேருக்கு அபராதம்
உதகை அருகே வனப் பகுதியில் பிளாஸ்டிக் பேப்பரில் கூடாரம் அமைத்து நெருப்பு மூட்டி குளிா் காய்ந்த மூவருக்கு வனத் துறையினா் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
உதகை குந்தா வனச் சரகம், தாய்சோலை பிரிவு, பிக்கட்டி காவல் நிலைய பகுதிக்கு உள்பட்ட குந்தா காப்பு ஊசிமலை முருகன் கோயில் வனப் பகுதியில் உள்ளது. இதனருகே பிளாஸ்டிக் பேப்பரில் கூடாரம் அமைத்து சிலா் நெருப்பு மூட்டி குளிா் காய்ந்து வந்தது வனத் துறையினருக்கு தெரியவந்தது.
இதையடுத்து, அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்த வனத் துறையினா் அங்கு தங்கியிருந்த மஞ்சூா் பகுதியைச் சோ்ந்த கோகுல்கண்ணன் (30), தாய் சோலைப் பகுதியைச் சோ்ந்த ரித்திக் (23), எடக்காடு பகுதியைச் சோ்ந்த விக்னேஷ்வரன் (27) ஆகியோருக்கு நீலகிரி மாவட்ட வன அலுவலா் கெளதம் உத்தரவின்பேரில் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.